/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேண்டுமா
/
நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேண்டுமா
PUBLISHED ON : அக் 02, 2024

தமிழ்நாடு வேளாண் பல்கலை 2018 ல் வெளியிட்ட நிலக்கடலை டி.எம்.வி. 14 ரகத்தை சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம். துரு நோய், இலைப்புள்ளி நோய்க்கு எதிர்ப்புத் தன்மையுடன் மானாவாரியில் 95--100 நாட்களில் ஒரு எக்டேருக்கு சராசரியாக 2124 கிலோ தரமான பருப்பாக மகசூல் தரும்.
நிலம் தயாரித்தல்
மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலத்தில் சட்டிக் கலப்பையால் உழுதபின் 3 முறை இரும்பு கலப்பை அல்லது நாட்டு கலப்பையால் மண் கட்டிகள் உடையும் வரை உழ வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் மேங்கோசெப் பூஞ்சாண மருந்து கலந்து விதைத்தால் வேரழுகல், தண்டழுகல் நோய் வராமல் தடுக்கலாம்.
மூன்று பாக்கெட் (600 கிராம்) ரைசோபியம் நுண்ணுயிரி, ஆறிய வடிகஞ்சி சேர்த்து விதையுடன் கலந்து நிழலில் உலரவைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்யாவிட்டால் ஒரு எக்டேருக்கு 10 பாக்கெட் ரைசோபியம், 25 கிலோ தொழுஉரம், 25 கிலோ மணலுடன் சேர்த்து விதைப்பதற்கு முன் துாவவேண்டும். இதனால் பயிரின் நோய் எதிர்ப்புதிறன் அதிகரிக்கும்.
பயிர் இடைவெளி
நிலக்கடலைக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ. செடிக்கு செடி 10 செ.மீ. அளவில் இடைவெளி விட்டு சதுரமீட்டருக்கு 33 செடிகள் இருக்குமாறு பராமரித்தால் பயிர்களுக்கு போதுமான அளவு நீர், உரம், காற்று கிடைக்கும்.
உரம் எவ்வளவு தேவை
தொழுஉரம் கிடைத்தால் ஏக்கருக்கு 12.5 டன் இட வேண்டும். தென்னை நார்க் கழிவை எக்டேருக்கு 12.5 டன் என்ற அளவில் புளுரோட்டஸ் பூஞ்சாண விதை மூலம் மட்க வைத்தும் உரமாக இடலாம். பொதுவான உர அளவாக இறவைக்கு 17:34:54 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்களை ஒரு எக்டேருக்கு இட வேண்டும். தழை மற்றும் மணிச்சத்தை மூன்றாக பிரித்து அடியுரமாக 50 சதவீதம், விதைத்த 20, 45 ம் நாளில் தலா 25 சதவீத உரமிட வேண்டும்.
களை நிர்வாகம்
விதைத்த 3ம் நாள் எக்டேருக்கு 400 லிட்டர் தண்ணீருடன் 2 லிட்டர் புளுகுளோரலின் (பாசான்) கலந்து தெளிக்கவேண்டும். விதைத்த 7 வது நாள் மறுவிதை ஊன்றி பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும். 45 ம் நாளில் 2வது களை எடுத்த பின் எக்டேருக்கு 400 கிலோ ஜிப்சம் உரமிட்டு மண் அணைத்தால் விழுதுகள் கீழே இறங்கி காய் பிடிக்கும் திறன் அதிகமாகும். மானாவாரி பயிர்களுக்கு 45 --60வது நாளில் மண்ணின் ஈரத்தைப் பொறுத்து ஜிப்சம் இடவேண்டும். சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள மண்ணில் ஜிப்சம் இடக்கூடாது.
விதைத்த 20 நாட்கள் கழித்து பூப்பிற்கு பின் 2 முறையும் முளைப்புப் பருவத்தின் போது ஒன்று அல்லது 2 முறை நீர்பாய்ச்ச வேண்டும். பூக்கும் மற்றும் காய் உருவாகும் போது 0.5 சதவீத பொட்டாசியம் குளோரைடு தெளித்தால் நீர்த்தட்டுப்பாடு குறையும். அறுவடைக்கு முன் நீர் பாய்ச்சவேண்டும்.
அறுவடைக்கு முந்தைய பாசனத்திற்கு தண்ணீர் இல்லையெனில் நாட்டு கலப்பையால் செடிகளை பிடுங்கி காய்களை சேகரிக்கவேண்டும். காய்களை 5 நாட்கள் வரை ஒன்றிரண்டு நாள் இடைவெளியில் வெயிலில் உலர்த்தவேண்டும். வெப்பம் அதிகமாக இருந்தால் நேரடி வெயிலை தவிர்க்கவேண்டும்.
மானாவாரியில் நிலக்கடலையுடன் 4 க்கு ஒன்று என்ற விகிதத்தில் உளுந்து, 6:1 விகிதத்தில் தட்டைபயறு, துவரை, 6:2 விகிதத்தில் சூரியகாந்தியை ஊடுபயிர் செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
- மகேஸ்வரன், திட்டஒருங்கிணைப்பாளர் - அருண்ராஜ், சபரிநாதன் தொழில் நுட்ப வல்லுநர்கள்சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம்தேனி. 96776 61410