/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மகசூல் அதிகரிக்கணுமா... நிலத்தை சீர்செய்யணும்
/
மகசூல் அதிகரிக்கணுமா... நிலத்தை சீர்செய்யணும்
PUBLISHED ON : ஜூலை 16, 2025

முல்லைப்பெரியாறு பாசனத்தை நம்பி 10 ஏக்கரில் நெல் விவசாயம் செய்கிறேன். பாதிக்கு பாதி நேரடி கருவி மூலம் விதைப்பும், இயந்திர நாற்று விதைப்புமாக சாகுபடி செய்வது குறித்து விவரித்தார்.
மதுரை மாவட்டத்தில் 2005ல் முதன்முதலாக ஒற்றை நெல் நாற்று நடவுமுறை சோதனை ரீதியாக செய்து பார்த்தேன். அடுத்து ஆள் பற்றாக்குறையை சரிசெய்ய டிரம் சீடர் கருவியை பயன்படுத்தினேன். கையால் விதைக்கும் நேரடி நெல் விதைப்பில் விதைகளுக்கு இடையே இடைவெளி இருக்காது, காற்றோட்டம் இருக்காது.
சூரியவெளிச்சமும் முறையாக கிடைக்காது என்பதால் சீதோஷ்ண நிலை மாற்றத்தின் போதும் அதிக ஈரப்பதமாக இருக்கும் போது நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும். கருவி மூலம் வரிசை விதைப்பில் இந்த பிரச்னையில்லை. வேறு வயல் தண்ணீர் வந்தாலும் தண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என்பதால் மேட்டுப்பாங்கிற்கு விதை நடவு தான் செய்கிறோம்.
டிரம் சீடர் கருவி மூலம் நேரடி விதைப்பில் காய்ச்சலும் பாய்ச்சலுமாக ஆரம்பத்தில் இருந்து 15 நாட்கள் வரை கவனித்துக் கொள்ள வேண்டும். பள்ளமான பகுதிகளில் 20 நாட்கள் வயதுடைய நாற்றுகளை இயந்திர நடவு செய்வதால் தண்ணீர் இருந்தாலும் தாக்குப்பிடிக்கும். இயந்திர நாற்று நடவிலும் சரியான காற்றோட்டம் இருப்பதால் நோய், பூச்சி தாக்குதல் கட்டுப்பாட்டில் இருக்கும்.
வயலை சமன் செய்யணும்
வேளாண் பொறியியல் துறையில் இருந்து வாடகைக்கு லேசர் லெவலிங் கருவி வாங்கி இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நிலத்தை சமப்படுத்துகிறோம். ஒரு ஏக்கருக்கு சமன்செய்ய மேடு பள்ளத்தை 2 முதல் 4 மணி நேரமாகும். மணிக்கு கட்டணம் ரூ.500 தான். ஒருமுறை செய்வதால் இரண்டாண்டுகளுக்கு சமன் செய்ய வேண்டியதில்லை. வயலை துல்லியமாக சமன் செய்வதால் தண்ணீர் குறைவாக பாய்ச்சினால் போதும். மேடு பள்ளமின்றி பயிர்களுக்கு காய்ச்சலும் பாய்ச்சலுமாக செயல்படுத்த முடியும். சீராக தண்ணீர் நிற்கும் போது களைகள் கட்டுப்பட்டு குறையும். பயிர்களுக்கு முறையான காற்றோட்டம் கிடைத்து துார் வெடித்து நிறைய சிம்புகள் வரும்.
கோடை உழவு அவசியம்
இயற்கை விவசாயத்திற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பூச்சிமருந்து தெளிப்பதில்லை. ரசாயன உரத்தை குறைத்து வருகிறோம். ஆண்டுதோறும் மழை பெய்த பின் புழுதி உழவு செய்வோம். அடுத்து மழை பெய்யும் போது களைகள் முளைத்து வரும். மீண்டும் உழும் போது களைகள் உரமாக மாறிவிடும். களைகள் கட்டுப்படும். நோய்க்கிருமிகள் இறந்துவிடும். கூண்டுப்புழு இருந்தாலும் பறவைகள் தின்றுவிடும் என்பதால் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். மழைநீர் வயலில் சீராக இறங்கும்.
வரப்பு பயிர்கள் பயிரிடணும்
வரப்போரங்களில் பொறிப் பயிர்கள் என்று சொல்லக்கூடிய உளுந்து, பாசிப்பயறு, தட்டைபயறு விதைக்கிறோம். அந்த பயிர்கள் மஞ்சள் நிறத்தில் பூக்கும் போது நன்மைசெய்யும் பூச்சிகள் பயறுகளைத் தேடி வரும். அவை அப்படியே நெல் வயலுக்கு சென்று அங்குள்ள தீங்கு செய்யும் பூச்சிகளை உட்கொள்ளும். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கொழிஞ்சி பயிரிடுகிறோம். இதை ஆடு, மாடு தின்னாது. நைட்ரஜன் சத்துக்களை வேர்முடிச்சுகளில் நிலைநிறுத்துவதால் பயிர்களுக்கான உரச்செலவு குறையும்.
அசோஸ்பைல்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா உரங்களை நன்கு மட்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தில் கலந்து ஒருவாரம் வரை வைத்திருந்து கடைசி உழவின் போது அல்லது முதல் களை எடுக்கும் போது ஈரப்பதமாக உள்ள நிலையில் துாவி விடுவோம். கோடை உழவின் போது நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் இறந்து விடும் என்பதால் அவற்றை இம்முறையில் மீண்டும் பெருக்கி மண்ணில் நிலை நிறுத்துகிறோம்.
அறுவடையில் கவனம்
கதிர் அறுவடை நேரத்தில் வயல் நன்கு காய்ந்திருக்க வேண்டும். அப்போது தான் அறுவடை இயந்திரம் வரும் போது கதிர்கள் சீராக அறுவடையாகும். மழை பெய்யும் நேரத்தில் அறுவடை இயந்திரம் வயலில் இறங்கினால் வண்டியின் தடம் பதிந்து வயல் மேடு பள்ளமாகி விடும்.
இது அறுவடையை கடினப்படுத்துவதோடு வயல் மேடு பள்ளமாகி சாகுபடியில் பிரச்னை ஏற்படும். குறுவை சீசனில் டிரம் சீடர் விதைப்பு செய்வதற்கும் உழவன் செயலியில் வானிலை தட்பவெப்பநிலையை பார்த்து தான் விதைப்போம். வானிலை அறிக்கை பார்த்து தான் அறுவடையை தொடங்குவோம். தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்தியதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 5 மூடை வீதம் (மூடைக்கு 67 கிலோ) கூடுதலாக கிடைக்கிறது.
விற்பனைக்கு வாய்ப்பு
மத்திய அரசின் இ - நாம் தேசிய மின்னணு சந்தை மூலமும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மையத்திலும் நெல்லை விற்பனை செய்வதால் பணம் பழுதின்றி கிடைக்கிறது. விவசாயிகள் விற்பனையில் தான் சிரமப்படுகிறோம். மழைக்காலத்தில் அரசு சரியான நேரத்தில் நெல் கொள்முதல் மையம் திறந்தால் நன்றாக இருக்கும். தாமதம் செய்யும் போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இழப்பு அதிகமாகிறது என்றார்.
இவரிடம் பேச: 95850 95748.
- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.