/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வளம் தரும் வேளாண் காடுகள்; பனைமரத்தில் வளரும் மிளகு தரும் பலே லாபம்!
/
வளம் தரும் வேளாண் காடுகள்; பனைமரத்தில் வளரும் மிளகு தரும் பலே லாபம்!
வளம் தரும் வேளாண் காடுகள்; பனைமரத்தில் வளரும் மிளகு தரும் பலே லாபம்!
வளம் தரும் வேளாண் காடுகள்; பனைமரத்தில் வளரும் மிளகு தரும் பலே லாபம்!
PUBLISHED ON : ஜூலை 20, 2025

மண்ணிற்கு வளத்தையும், விவசாயிகளுக்கு வருமானத்தையும் கூட்டுகிறது வேளாண் காடுகள் எனும் “மரம் சார்ந்த விவசாய” முறை. அந்த வகையில் 'வளம் தரும் வேளாண் காடுகள்' தொடரில் வெற்றி பெற்ற முன்னோடி விவசாயிகளின் அனுபவ பகிர்வுகளை கேட்போம் வாருங்கள்.
கடலூர் கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமலை, பனை மரத்தில் மிளகு சாகுபடியை சாத்தியப்படுத்தி லாபம் ஈட்டி வருகிறார். இவரின் 25 ஏக்கர் பண்ணையில் 8 ஏக்கரில் கரும்பு, 7 ஏக்கரில் முந்திரி, 7 ஏக்கரில் மரவள்ளி சாகுபடி செய்திருக்கிறார். இதனிடையே மரங்களில் மிளகு கொடி ஏற்றிவிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், “சமவெளியிலும் மிளகு சாகுபடி சாத்தியமாக்க, நிழல் தரும் மரங்கள் நிறைந்த குளிர்ந்த சூழல் போதும். என் பண்ணையில் உள்ள எல்லா மரங்களிலும் மிளகு நன்றாக வளர்கிறது, அதிக செலவு இல்லாமல் லாபம் பார்க்கக்கூடிய ஒரே பயிர் மிளகுதான்.
நான் முதன் முதலில் மிளகு நட்டது ஒரு சுவாரஸ்யமான கதை, நான் மிளகு நட்டு 15 வருஷம் ஆகுது, அப்போ என் தென்னந்தோப்புல திருட்டு சம்பவங்கள் நடந்துட்டு இருந்தது, திருடர்கள் யாரும் மரத்துல ஏறக்கூடாதுன்னு முதல் முதலில் மிளகு நட்டு தென்னையில் ஏத்திவிட்டேன். அந்த மிளகுகொடி நன்றாக காய்த்து பலன் தந்தது எனக்கு ஊக்கமாக இருந்தது.” எனக் கூறினார்.
பனைமரத்தில் மிளகு
பனை மிளகு சாகுபடி குறித்து அவர் கூறுகையில், 'இங்குள்ள மற்ற மரங்களை விட பனை மரத்தில் மிளகு அருமையாக வளர்கிறது. குறிப்பிட்ட அளவு அதிக வெயில் கிடைப்பதால் காய்ப்பு சிறப்பாக உள்ளது. முந்திரியில் நிழல் அதிகமாக இருப்பதால் மற்ற மரங்களை ஒப்பிடுகையில் 50% காய்ப்புதான் கிடைக்கிறது. ஆனால், எந்தவொரு கூடுதல் செலவும் இல்லாமல் கிடைக்கும் இந்த வருவாய் லாபம் தானே.' என்கிறார்
மிளகு சாகுபடியில் கவனிக்க வேண்டியவை
மேலும் தொடர்ந்த அவர், 'மிளகு சாகுபடியில் உள்ள ஒரு முக்கிய விஷயம் கன்றுகளை நடவு செய்து உயிர் பிடித்து வளரும் வரை கவனமாக பராமரிக்க வேண்டும். பிழைக்காத கன்றுகளை நீக்கி புதிய கன்று நடவு செய்ய வேண்டும். இதனால் கன்றுகளின் எண்ணிக்கையை பாராமரிக்க முடியும். பராமரிப்பிற்கு பெரிய செலவு ஏதும் இல்லை, இயற்கை இடுபொருளே போதுமானது. மிளகு அறுவடை செய்யும்போது மட்டும் கூலிஆட்கள் வைத்துக்கொள்ளலாம்.”
“உள் வரப்புகளில் உள்ள பாக்கு மர வரிசைகளிலும் மிளகு சாகுபடி செய்யத் தொடங்கி உள்ளேன். புதுக்கோட்டை விவசாயிகள் மூலம் கிளைரிசிடியாவிலும் மிளகு படரவிடலாம் என்று தெரிந்துகொண்டபின், 2.5 ஏக்கரில் கிளைரிசிடியா போத்துகளை நடவு செய்து மிளகு கொடி ஏற்றி உள்ளேன்.” எனக் கூறினார்.
லாபம் தரும் மிளகு சாகுபடி
மிளகு சாகுபடியால் கிடைக்கும் வருமானம் குறித்து அவர் கூறுகையில் 'மிளகு நடவு செய்த மூன்றாவது ஆண்டிலிருந்து 500 கிராம் முதல் துவங்கி படிப்படியாக உயர்ந்து, பத்து வருடங்களில் 10 கிலோ வரை கிடைக்கும். என் பண்ணையில் கடந்த ஆண்டு 600 கிலோ அளவிற்கு மிளகு கிடைத்தது, மிளகை கிலோ 700 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். மிளகினால் மட்டுமே கடந்த ஆண்டில் 3 லட்சத்திற்கு மேல் ரூபாய் வருமானம் எடுத்துள்ளேன்.
தற்போது இயற்கையாக விளைந்த மிளகின் தேவை அதிகரித்து வருவதால் வருங்காலங்களில் அதிக வருமானம் வர வாய்ப்புள்ளது. மரங்கள் வளர்ந்துட்டு இருக்கு, அது எதிர்காலத்தில் வருமானம் தரும். அதுல மிளகு கொடிய ஏத்தி விட்டு சின்ன சின்ன வேலைகளை சலிக்காமல் செய்தால் ஒவ்வொரு வருசமும் நல்ல லாபம் பார்க்கலாம்” எனக் கூறினார்.