sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மதுரை பகுதியில் நெல் சாகுபடியில் அடுத்தது என்ன?

/

மதுரை பகுதியில் நெல் சாகுபடியில் அடுத்தது என்ன?

மதுரை பகுதியில் நெல் சாகுபடியில் அடுத்தது என்ன?

மதுரை பகுதியில் நெல் சாகுபடியில் அடுத்தது என்ன?


PUBLISHED ON : ஆக 03, 2011

Google News

PUBLISHED ON : ஆக 03, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியார், வைகை பாசனத் திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி என்ற கட்டுரையை விவசாயிகள் தினமலரில் படித்துவிட்டு தேர்ந்துஎடுத்த நெல் ரகங்களை நடவு செய்துள்ளனர். பயிர்களுக்கு தேவையான கட்டுக்கோப்பு முறைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். நெற்பயிருக்கு காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர்ப்பாசனம் செய்யலாம். கதிர்கள் உருவாகும் தருணத்திலிருந்து அறுவடை நிலை வரை நான்கு முதல் ஐந்து செ.மீ. அளவிற்கு நீர் பாய்ச்சி, கட்டியநீர் ஆவியானவுடன் மீண்டும் நீர் கட்ட வேண்டும். சதுரமுறை நடவினை செய்துள்ளவர்கள் கோனோவீடர் கருவியை உபயோகிக்க வேண்டும். இப்பணியை பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம். பயிரின் ஆரம்ப கட்டத்தில் களைகளை கட்டுப் படுத்த பூட்டாகுளோர் என்ற களைக்கொல்லியை 2.5 லிட்டர்/ஏக்கர் என்ற அளவில் உபயோகித்து களைகளை அழிக்கலாம். விவசாயிகள் சாகுபடியில் சுத்த சாகுபடி செய்ய வேண்டும். அதாவது வயல்களில் உள்ள வரப்புகளில் உள்ள களைச் செடிகளை முழுமையாக அகற்றிவிட வேண்டும். அப்போது வயலில் நெற்பயிர் மட்டும் அழகாகத் தோன்றும். இதனால் பயிர் மேல் சூரிய வெளிச்சம் நன்றாக விழும். வரப்புகளில் எலிகள் தொந்தரவு இருக்காது. பயிர்களில் பூச்சி, வியாதி அதிக அளவில் இருக்காது. அடுத்து பயிர் நன்கு வளர சிபாரிசு செய்யப்பட்ட உரங்களை இடவேண்டும். மேலுரம் குறிப்பிட்ட தருணங்களில் இடவேண்டும். இது கவனித்து செய்ய வேண்டிய பணியாகும். பயிருக்கு எக்டருக்கு 120:38:38 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இடப்படுகின்றன. தழை, சாம்பல் சத்துக்களை பிரித்து இடுவதால் பயிர் வளர்ச்சி செழிப்பாக இருக்கும். இவைகளுக்கு முன் எக்டருக்கு 25 கிலோ ஜிங்க் சல்பேட்டை உலர்ந்த மணலுடன் கலந்து வயலில் நடவுக்கு முன் பரவலாக மண்ணின் மேல் பரப்பில் தூவிவிட வேண்டும். நெற்பயிரைத் தாக்கும் முக்கிய பூச்சிகளான தண்டு துளைப்பான், சாம்பல் மற்றும் பச்சை தத்துப்பூச்சி, கதிர் நாவாய்ப்பூச்சி, இலை சுருட்டுப்புழு, புகையான், ஆனைக்கொம்பன் ஈ இவைகள் நெற்பயிரை தாக்குகின்றன. நோய்களில் குலைநோய், பாக்டீரியா இலை கருகல் நோய், கதிர் உறை அழுகல் நோய், தானிய நிறமாற்றும் நோய் இவைகளுடன் எலிகளின் தாக்குதல் மகசூலை பெரிதும் பாதிக்கின்றன. விவசாயிகள் தாவர மற்றும் உயிரின முறைப்படி பயிர் பாதுகாப்பு செய்யலாம். இனக்கவர்ச்சிப் பொறிகளை பயன்படுத்தலாம். பயிர் பாதுகாப்பு செய்யும்போது நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க வேண்டும். விவசாயிகள் தேவையின் அடிப்படையில் மட்டும்தான் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் பயிர் பாதுகாப்பில் சமுதாய இயக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். இவர்கள் வயலில் எலிகளை அழிக்க பயிர் அறுவடை செய்தபின் வயலில் இறங்கி வரப்புகளை வெட்டி எலிகளை பிடித்து அழித்துவிடலாம். விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க விதைநேர்த்தி செய்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும்.

பயிரைத் தாக்கும் குருத்துப்பூச்சி மற்றும் இலை சுருட்டுப் புழுக்களை அழிக்க வயலில் ஒட்டுண்ணியை விடலாம். ஒட்டுண்ணியின் பெயர் டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம். வயலில் நெற்பயிர் மேல் மரத்தின் நிழல் தொடர்ந்து இருந்துவந்தால் பயிர் இலை சுருட்டுப் புழுவால் பாதிக்கப்படும். நிழலைப் போக்க மரக்கிளையை வெட்டி அகற்றிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும்.

நெல் வயலில் திடமான குச்சிகளை நடவேண்டும். குச்சிகளின் தலைப்பாகம் பயிரின் உயரத்தைவிட அதிக உயரம் கொண்டிருக்க வேண்டும். குச்சியின் தலைப்பாகத்தில் துணிகளை நன்கு சுருட்டி கட்டி அவைகள் மெத்தைபோல் இருக்கச் செய்ய வேண்டும். இக்குச்சிகளை பரவலாக நெல்வயலில் நட்டுவிட்டால் அவைகளின் மேல் கோட்டான்கள் என்று அழைக்கப் படும் பறவைகள் இரவு நேரத்தில் வந்து உட்கார்ந்துகொள்ளும். இப்பறவைகளுக்கு இரவில் கூர்மையாக பார்க்கும் திறன் உள்ளது. இரவு நேரத்தில் பயிர்களின் இடைவெளியில் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக்கும் எலிகளை கோட்டான்கள் பறந்துசென்று பிடித்து குச்சிகளின்மேல் வந்து உட்கார்ந்துகொண்டு சாவகாசமாக தின்றுவிடும். சில சமயம் கோட்டான்கள் வயலில் உள்ள தவளையையும் பிடித்துத் தின்றுவிடும்.

-எஸ்.எஸ்.நாகராஜன்






      Dinamalar
      Follow us