sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : ஆக 03, 2011

Google News

PUBLISHED ON : ஆக 03, 2011


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகம் 'அண்ணா 4': கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 'அண்ணா 4' என்ற புதிய மானாவாரி நெல் ரகத்தை வெளியிட்டது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மானாவாரி நெல் சுமார் ஒரு லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய 105 நாட்கள் வயதுடைய 'அண்ணா 4' நெல் ரகம் செப்டம்பர்-அக்டோபர் மாத நேரடி விதைப்பிற்கு ஏற்றது. 66 சதம் அறவைத்திறனும் நீண்ட சன்னமான வெள்ளை அரிசியையும் கொண்டது. இந்த ரகம் எக்டருக்கு சராசரியாக 3.7 டன் தானிய விளைச்சலைத் தரவல்லது.

கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரமக்குடி வட்டாரத்தைச் சேர்ந்த கருங்குளம், சிங்கராயபுரம், தொழுபெத்தனேந்தல், மற்றும் போகலூர் வட்டத்தைச் சேர்ந்த சேமனூர் ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட 88 உழவர்களின் நிலங்களில் ஒரு ஏக்கர் பரப்பளவில் செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்பட்டன. ஆகஸ்ட் மாத இறுதி வாரத்திலும், செப்டம்பர் மாத முதல் வாரத்திலும் நேரடி விதைப்பு மேற்கொள்ளப் பட்டது. இதில் கருங்குளம், சிங்கராயபுரம், தொழுபெத்தனேந்தல் ஆகிய கிராமங்களில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலும் அதைத் தொடர்ந்த நாட்களிலும் போதுமான மழை பெய்தது. ஆனால் சோமனூர் கிராமத்தில் செப்டம்பர் மாதம் 3ம் வாரத்தில் முதல் மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து மழை கிடைத்தது. பயிர் வளர்ச்சிக் காலத்தில் கருங்குளம், சிங்கராயபுரம் ஆகிய கிராமங்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் மட்டும் தென்பட்டது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டன.

பயிர் வளர்ச்சிக் காலத்தில் போதுமான மழை பெய்தது. 'அண்ணா 4' நெல் ரகம் மட்டுமின்றி இதர ரகங்களும் செயல் விளக்கத் திடல் அமைக்கப்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டன. குறிப்பாக ஆடுதுறை நெல் ரகங்களும் நாட்டு நெல் ரகங்களும் சாகுபடி செய்யப்பட்டன. இவை கதிர் முதிர்வடையும் பருவத்தில் பெய்த மழையினால் சாய்ந்துவிட்டன. ஆனால் அண்ணா 4 நெல் ரகம் மட்டும் சாயாத தன்மையுடன் காணப்பட்டது. இதனை விவசாயிகள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டனர்.

கருங்குளம் கிராமத்தில் 3 விவசாயிகளுக்கு முறையே 2722, 2722, 2770 கிலோ தானிய விளைச்சல் கிடைத்தது. இது எக்டருக்கு சராசரியாக 6750 கிலோ விளைச்சலாகும். மானாவாரி விவசாயத்தில் இத்தகைய விளைச்சலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று உழவர்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர். பயிரின் சாயாத தன்மை, பூச்சி, நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன் ஆகிய குணங்கள் இத்தகைய விளைச்சலை தங்களுக்கு பெற்றுத்தந்ததாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதர உயர்விளைச்சல் ரகங்களை சாகுபடி செய்யும்பொழுது மேற்கொள்ளும் பூச்சி, நோய் கட்டுப்பாடு தொடர்பான செலவினங்கள் அண்ணா 4 நெல் சாகுபடி செய்வதன்மூலம் தவிர்க்கப் பட்டதாகவும் தெரிவித்தனர் விவசாயிகள். நான்கு கிராமங்களிலும் அமைத்த செயல்விளக்கத் திடல்களில் சராசரியாக ஏக்கருக்கு 2041 கிலோ தானிய விளைச்சல் கிடைத்துள்ளது. இது இதர கிராமங்களின் விளைச்சலைவிட 7 சதம் முதல் 22 சதம் வரையிலும் நாட்டு ரகங்களின் விளைச்சலைவிட சுமார் 101 சதம் வரையிலும் அதிகமாகும். மதுரை5 ரகம் சராசரியாக 1897 கிலோவும் ஆடுதுறை ரகங்கள் 1883 கிலோவும் கொடுத்துள்ளன. (தகவல்: ச.செந்திவேல், ஆர்.கந்தசாமி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி. 94422 61756)

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us