PUBLISHED ON : ஆக 20, 2025

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் கிடைக்கக்கூடிய அனைத்து பூச்சி கட்டுப்பாடு தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது.
உயிரியல், வேதியியல், இயற்பியல் மற்றும் பயிர் சார்ந்த கலாசார மேலாண்மை உத்திகளை பயன்படுத்தி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் போது சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்கலாம். இதில் மஞ்சள் ஒட்டு பொறியின் பயன்பாடு அதிகம்.
பயிர்களை தாக்கி சேதம் விளைவிக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளில் வெள்ளை ஈக்கள், தத்துப்பூச்சிகளைச் சொல்லலாம். இயற்கை விவசாயத்திற்கு பூச்சிகளை கவர்ந்து அழிப்பதற்கு மஞ்சள் ஒட்டும் பொறி அதிகளவில் பயன்படுகிறது. வெள்ளை ஈக்களின் முதிர்ந்த பருவம் மஞ்சள் நிறங்களை கவர்ந்திழுக்கும்.
மேலும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் உடலமைப்பு, காற்று வீசும் திசையில் பறக்கும் போது எளிதாக மஞ்சள் அட்டைகளில் ஒட்டி இறப்பதால் இனப்பெருக்கம் கட்டுப் படுத்தப் படுகிறது. குறைந்த செலவில் எளிய முறையில் மஞ்சள் ஒட்டு பொறி தயார் செய்யலாம். இதனால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லை.
சாகுபடி செய்யும் பெரும்பாலான பயிர்களில் இதனை பயன்படுத்தி வெள்ளை ஈக்கள், பச்சை பூச்சி, தத்துப்பூச்சி, மேலும் பல பூச்சிகளை கவர்ந்து அழிக்கமுடியும்.
இதனால் சாறு உறிஞ்சும் பூச்சிகளால் பரவும் வைரஸ் நோய்களின் பரவலையும் கட்டுப்படுத்தலாம். தாளின் இருபுறத்திலும் மஞ்சள் நிறம் மற்றும் பிசுபிசுப்பு தன்மை ஏற்படுத்தி காற்று வீசும் திசையில் பயிர்களின் கிடை மட்டத்திற்கு இணையாக கட்ட வேண்டும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகள் பயிர்களின் மென்மையான பகுதியை பாதிப்பதால் தண்டுப் பகுதியில் மஞ்சள் ஒட்டும் பொறியை பயன்படுத்துவதில் பயனில்லை. மஞ்சள் ஒட்டு பொறியில் கவரப்படும் பூச்சிகளின் எண்ணிக்கை, தன்மையை பொறுத்து அடுத்தடுத்து கட்டுப்படுத்தும் முறைகளை பின்பற்ற வேண்டும்.
மேலும் தேவையின் அடிப்படையில் இந்த பொறியை மாற்றி வைப்பது சிறந்தது.
எப்படி பயன்படுத்துவது மஞ்சள் ஒட்டுபொறி அட்டையின் இருபுறமும் ஒட்டும் தன்மை இருக்க வேண்டும். பயிர்களின் உயரத்தில் இருந்து 10 முதல் 15 செ.மீ., உயரத்தில் நிறுவ வேண்டும். அட்டைகளை பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அட்டைகளை கிடை மட்டமாக நிறுவ வேண்டும்.
இதன் மூலம் அதிக காற்று வீசும் போது அட்டைகள் வளையாமல் இருப்பதோடு, அதிக பூச்சிகளை கவரலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை அட்டையில் இறந்துள்ள பூச்சிகளை சுத்தம் செய்து மீண்டும் ஒட்டு பசை தடவ வேண்டும். அட்டைகளை காற்று வீசும் திசைக்கு இணையாக கட்டும் போது பூச்சிகள் பறக்கும் போது எளிதில் ஒட்டி இறந்துவிடும்.
- அருள்மணி தோட்டக்கலை உதவி இயக்குநர்
கொட்டாம்பட்டி அலைபேசி: 80561 85081