/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
தோட்டத்தில் பஞ்சகவ்யா தயாரிக்கலாம்
/
தோட்டத்தில் பஞ்சகவ்யா தயாரிக்கலாம்
PUBLISHED ON : ஜூலை 23, 2025

பஞ்சகவ்யா கரைசலானது 75 சதவீதம் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் 25 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது. பயிர்கள் ஒரே சீராக வளர்கிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது, பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்
பசுஞ்சாணம் புதியது 5 கிலோ, பசு கோமியம் 4 லிட்டர், பசும்பால் 3 லிட்டர், புளித்த தயிர் 2 லிட்டர், பசு நெய் அரை லிட்டர், இளநீர் 2, வாழைப்பழம் 12, நாட்டு சர்க்கரை அரை கிலோ, சிறிதளவு சுண்ணாம்பு, தோட்டத்து மண் சிறிதளவு.
சாணத்தை நெய்யுடன் பிசைந்து பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைக்க வேண்டும். தினம் ஒரு முறை இதை கிளற வேண்டும். நான்காவது நாள் அகலமான மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது டிரம்மில் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கையால் கரைத்து, கம்பி வலையால் வாய்ப்பகுதியை மூடி நிழலில் வைக்க வேண்டும்.
தினமும் காலை, மாலையில் பல முறை கலக்கி விட்டால் கலவைக்கு அதிகக் காற்றோட்டம் கிடைத்து நுண்ணுயிர்கள் பெருகும். இப்படி 22 நாட்கள் கலக்கி வந்தால் பஞ்சகவ்யா கரைசல் தயாராகி விடும். இதை ஆறு மாதம் வரை தினமும் கலக்கி விட்டு கெடாமல் பயன்படுத்தலாம்.
தண்ணீர் குறைந்து கலவை கெட்டியானால் பயிருக்கு தெளிக்கும் அளவிற்கு மட்டும் எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து கலக்கி பயிர்களுக்கு பயன்படுத்தலாம். இந்த கலவைக்கு பலன் உண்டு.
பயன்படுத்தும் முறை
காய்கறிகள், கொடிவகைகள், பணப்பயிர்கள், தானியப்பயிர்கள், பயறுவகைப்பயிர்கள், எண்ணெய்வித்து. மரப்பயிர்களுக்கு பயன்படுத்தலாம். காய்கறி பயிர்களில் பூக்கள் பூக்கும் தருணத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி கரைசலை கலந்து வாரம் இருமுறை தெளிக்கலாம்.
மா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, நெல்லி, வாழை மரங்களில் பூ விடுவதற்கு முன் மாதம் ஒரு முறையும் பூ விட்ட பின் 15 நாட்களுக்கு ஒருமுறையும் பிஞ்சு விட்ட பின்பும் தெளிக்கலாம்.
ஒரு கிலோ விதைக்கு 200 மில்லி பஞ்சகவ்யா கரைசலை சேர்த்து 30 நிமிடம் ஊறவைத்த பின் விதைக்கலாம். கெட்டித்தோல் உள்ள விதைகளுக்கு 60 நிமிடம் ஊறவைக்க வேண்டும். 100 லிட்டர் தண்ணீருக்கு 20 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலைகலந்து சொட்டு நீர்ப் பாசனத்தில் பயன்படுத்தலாம். அல்லது எருவில் கலந்து ஊட்டமேற்றியும் இடலாம்.
பஞ்சகவ்யாவில் பயிருக்குத் தேவையான விட்டமின் ஏ, பி, கொழுப்புச்சத்து, சைட்டோசைனின் வளர்ச்சி ஊக்கி, அமினோ அமிலம், தாதுக்கள் என 13 வகையான சத்துக்கள் உள்ளன. குறைந்த செலவில் நிறைந்த மகசூல் கொடுக்கக் கூடியது. மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். காய்கறிகளுக்கு சுவையும், மணமும் கூடும். காய்கறிகள் தரமானதாக இருக்கும்.
-அருண்ராஜ்
மண்ணியல் துறை தொழில்நுட்ப வல்லுநர்
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம்
காமாட்சிபுரம், தேனி
அலைபேசி: 90423 87853