/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
குறைந்த பராமரிப்பில் வளரும் குதிரைவாலி
/
குறைந்த பராமரிப்பில் வளரும் குதிரைவாலி
PUBLISHED ON : ஜூலை 30, 2025

மணல் கலந்த ஆற்றுமண்ணில் நன்கு வளரும். இரண்டு முறை உழுதால் மண்ணுக்கு அடியில் காற்றோட்டம் அதிகரித்து விதைகள் முளைத்து வளரும் தன்மை அதிகரிக்கும். வேர்கள் எளிதாக மண்ணை துளைத்து செடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். கோடை மழை துவங்கும் காலத்தில் அதாவது ஆடிப்பட்டம் எனப்படும் ஜூலை 2வது வாரம் முதல் சாகுபடி செய்யலாம்.
நேரடி விதைப்பு முறையிலும் விதைக்கலாம். அல்லது நெல்லைப் போன்று நர்சரியில் நாற்று உருவாக்கி 14 முதல் 21 நாட்கள் வளர்த்து நாற்று நடலாம். நேரடி விதைப்பில் 3 முதல் 4 செ.மீ., ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு எக்டேருக்கு 8 முதல் 10 கிலோ விதை தேவைப்படும். மகாராஷ்டிராவில் நாற்று நடவும் தமிழகத்தில் நேரடி விதைப்பும் அதிகமாக உள்ளது.
இடைவெளி தேவை இரண்டு வரிசைக்கு இடையில் 25 செ.மீ., இடைவெளி இருந்தால் உள்ளே செல்வதற்கும் களை எடுப்பதற்கும் எளிதாக இருக்கும். ஒரு எக்டேருக்கு 10 டன் தொழுஉரம் தேவை. இதை 3 பகுதிகளாக பிரித்து இடவேண்டும். முதல் முறை உழும் போது ஒரு எக்டேருக்கு மூன்றில் ஒரு பங்கு தொழுஉரம் இட வேண்டும். அடுத்த பங்கை விதைக்கும் போது 3டன் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடிகள் ஓரளவு வளர்ந்தபின் 3வது பங்கு தொழு உரம் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
இந்த தொழு உரத்தில் 40 கிலோ நைட்ரஜன், 30 கிலோ பாஸ்பரஸ், 50 கிலோ பொட்டாஷ் சத்துகள் உள்ளன. நைட்ரஜன் சத்தானது செடியின் கிளைகள் வளர்ச்சியடையவும் பாஸ்பரஸ், பொட்டாஷ் சத்துகள் அதிக பூ மொட்டுகளை உருவாக்கவும் உதவும். வறட்சியை தாங்கும் என்றாலும் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழை அதிகமாக பெய்யும் சூழலில் மழைநீர் வடிகால் வசதி செய்ய வேண்டும்.
களை, நோய் மேலாண்மை கையால் அல்லது களை கொத்து கருவியை கொண்டு 2 அல்லது 3 முறை களை எடுக்க வேண்டும். விதைத்த 25 முதல் 30 வது நாளில் முதல் களை எடுக்க வேண்டும். பூஞ்சையால் வரும் 'டவுனி மில்டியூ, ஸ்மட், ரஸ்ட்' நோய்கள் தாக்கும். 'டவுனி டில்டியூ' பூஞ்சை காளான் தாக்கினால் செடியில் பூ விட்ட பின் இலையில் மஞ்சள் நிறமாகி வளைந்து விடும். அப்படியே காய்ந்து செடி மொத்தமும் பாதிக்கப்படும். இலைகளை கிள்ளி எடுத்து விடலாம். அல்லது சிறியளவில் செடியாக வளரும் போதே செடியை வேருடன் பிடுங்கி எரிக்க வேண்டும்.
'ஸ்மட்' பூஞ்சை காளான் நோய் தாக்கினால் கதிரில் விதை எதுவும் இல்லாமல் அரித்து விடும். நோய் தாக்காமல் இருக்க விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2.5 கிராம் 'அக்ரோசன் ஜி.என்.,' அல்லது 'கிரிசன்' மருந்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து 7 முதல் 12 நிமிடங்கள் வரை விதையை ஊற வைத்து அதன் பின் உலர்த்தி விதைக்கலாம்.
'ரஸ்ட்' பூஞ்சை தாக்கினால் இலையில் சிவப்பு புள்ளிகளை உருவாக்கும். மொத்த செடியை அழிக்கும். பொருளாதார சேதம் ஏற்படுத்தும். ஒரு எக்டேருக்கு 2 கிலோ 'டைத்தீன்' மருந்தை 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பூச்சி மேலாண்மை தண்டு துளைப்பான் பூச்சியானது தட்டையை துளைத்து தாக்கும். இதை கட்டுப்படுத்த எக்டேருக்கு 1000 லிட்டர் லிட்டர் தண்ணீரில் 15 கிலோ
'திமெட்' மருந்து கலந்து தெளிக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு செடியின் துாரிலும் சிறிதளவு மருந்து வைத்து தண்ணீர் பாய்ச்சலாம். செடியின் வயது 95 முதல் 100 நாட்கள். பயிர் முதிர்ந்ததும் கையால் கதிரை வெட்டி அறுவடை செய்ய வேண்டும். அதன் பின் கதிரை தட்டி தானியங்களை பிரித்து உலர்த்தி உமிநீக்கம் செய்ய வேண்டும். ஒரு எக்டேருக்கு 400 முதல் 600 கிலோ அளவு குதிரைவாலி குறுந்தானியம், 1200 கிலோ வைக்கோல் கிடைக்கும்.
-வன்னியராஜன், டீன் அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி, திருச்சி
சங்கீதா, முதுநிலை ஆராய்ச்சியாளர்
அலைபேசி: 93606 51610