/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பயிர் பாதுகாப்பிற்கு உங்கள் கவனம்
/
பயிர் பாதுகாப்பிற்கு உங்கள் கவனம்
PUBLISHED ON : டிச 05, 2012

நெல் சாகுபடியை கவனமாக செய்துவரும் மதுரை விவசாயிகள் பயிர் பாதுகாப்பிற்கு கவனம் தரவேண்டும். பாதுகாப்புப்பணி நாற்றங்கால் கட்டத்தில் இருந்து துவங்க வேண்டும். இலைப்பேன், பச்சை தத்துப்பூச்சி, கூண்டுப்புழு, குருத்துப்பூச்சி தாக்கக் கூடும். மேலும் பேக்டீரியல் இலை கருகல் நோய் தோன்றலாம். பொதுவாக நாற்றங்கால் நோய்களைத் தவிர்க்க காப்பர் ஆக்சி குளோரைட் (பைட்டலான்) மருந்தினை உபயோகிக்கலாம். ஒவ்வொரு விவசாயி யின் கைவசம் இந்த மருந்து இருக்க வேண்டும்.
நெல் பயிரினை நட்டு அது பச்சை கட்டி வளரும் போது மேகமூட்ட நிலைகள் இருக்கும்போது நெல் பயிரினை இலை சுருட்டுப்புழு தாக்கும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் இப்பூச்சியால் நெல் பயிரில் அதிகம் சேதம் உண்டாகின்றது. இலைப்புழுக்கள் இலைகளின் இரு ஓரங்களையும் மெல்லிய நூலிழை கொண்டு பிணைத்துவிடும். புழுக்கள் இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்ணும். பச்சையம் சுரண்டப் பட்ட பகுதிகளில் வெண்மையாக மாறிவிடும். விரைவில் இலைகள் காய்ந்துவிடும். மிக அதிக அளவு தாக்குதல் நடந்தால் பயிர் வளர்ச்சி குன்றிவிடும். வளர்ச்சி பாதிக்கப்படும் போது கதிர்களில் நெல் மணிகள் பிடிப்பது பாதிக்கப்படுகிறது. நெல் பயிர் வளர்ச்சி பருவத்தில் பத்துசதம் இலைகள் பாதிக்கப் பட்டாலும் பூக்கும் பருவத்தில் ஐந்து சதம் பாதிக்கப் பட்டாலும் உடனே பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சாகுபடி நிலங்களில் மரங்கள் இருந்தால் நெல்பயிர் மேல் நிழல் விழக்கூடும். நிழல் விழக்கூடிய இடங்களில் பூச்சி பாதிப்பு அதிகமாக இருக்கும். விவசாயிகள் தழைச்சத்து உரங்களை அதிகமாக உபயோகிக்கும் போதும் இலை சுருட்டுப்புழு பாதிப்பு ஏற்படும். தழைச்சத்து உரங்களை ஒரே தவணையில் இடுவதைவிட பிரித்து இடும்போது புழு பாதிப்பினை சமாளிக்க முடியும். விவசாயிகள் எடுத்த எடுப்பில் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன் படுத்தாமல் வேம்பு மருந்துகள் 200 மில்லி அல்லது வேப்பங் கொட்டை சாறு 5 சதவீதம் இதில் ஒட்டு திரவம் சேர்த்து பயிர் மேல் தெளிக்கலாம். வேப்பங்கொட்டைசாறு 5 சதம் என்பது 10 கிலோ வேப்பங் கொட்டையை இடித்து அதனை 20 லிட்டர் நீரில் ஊறவைத்து அடுத்து வரும் நாளில் இதனை வடித்து கைத்தெளிப்பான் மூலம்20 டேங்குகளில் தெளிக்க வேண்டும். தொடர்ந்து பயிர் பாதுகாப்பு பணி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மானோகுரோட்டோபாஸ் 400 மில்லி அல்லது குளோரிபைரிபாஸ் 500 மில்லி ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும்.
சாகுபடி சமயம் வயல் மற்றும் வரப்புகளைக் களைச்செடிகள் வளர்ச்சி இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடுத்து விவசாயிகள் விளக்குப் பொறியை பயன்படுத்தலாம். ஒரு ஏக்கரில் ஐந்து விளக்குப் பொறிகளை அமைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். உயிரியல் முறையில் இப்பூச்சியைக் கட்டுப்படுத்த டிரைகோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 40,000 என்ற அளவில் வயலில் தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டம் தென்பட்ட உடனேயே விடவேண்டும். பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற பாக்டீரியா நுண்ணுயிரியை ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் புழுக்களின் சேதம் பொருளாதார சேத நிலையை தாண்டும்பொழுது தெளிக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளது சேவையை அவ்வப்பொழுது பெற்று திறமையாக செயல்பட வேண்டும்.
இலை சுருட்டுப்புழு சேதம் விளைவிப்பது போல் இலைகளில் தோன்றும் வெளிறிய பச்சை நிறத்தில் காணப்படும் சிறிய புழுக்கள் இலைகளை கத்தரிக்கோல் போல வெட்டும். வெட்டப் பட்ட இலைத்துண்டுகள் நீரில் மிதக்கும். இலைத் துண்டுகளில் கூடுகட்டி புழு உள்ளே இருந்துகொண்டு இருக்கும். வயலில் தண்ணீரை வடித்துவிட்டால் கூண்டுப்புழுக்கள் இறந்துவிடும். பயிர் மேல் குளோரிபைரிபாஸ் 20 இசி ஏக்கருக்கு 500 மில்லி தெளிக்கலாம். நெல் இலைகளின் நுனிப்பகுதியில் முட்டைக் குவியல்கள் தென்படும். இதிலிருந்து வரும் புழுக்கள் தண்டினுள் சென்று நெல் குருத்தினை அழிக்கின்றது. பூக்கும் பருவத்தில் புழு தாக்கும்போது கதிர்கள் காய்ந்து வெண்ணிற பதர்களாக வரும். நெல் குருத்துப்பூச்சியை அழிக்க வேப்பங்கொட்டை சாறு அல்லது வேப்ப எண்ணெய் 3 சதம் தெளிக்கலாம். அல்லது புரபெனோபாஸ் 50 சதம் 400 மில்லி அல்லது மானோகுரோட்டோபாஸ் 36 சதம், 400 மில்லி ஒரு ஏக்கர் பயிருக்கு தெளிக்கலாம். மேலே விவரித்த பயிர் பாதுகாப்பு முறைகள் விவசாயிகளுக்கு உதவக்கூடும்.
தற்போது சாகுபடி செய்ய இருக்கும் பட்டத்தில் கொடிய நோய்களாகிய குலைநோய், செம்புள்ளி நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைவு. இருப்பினும் நோய் தோன்றினால் கீழ்க்கண்ட பயிர் பாதுகாப்பினை செய்ய விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும். ஏக்கருக்கு எடிபென்பாஸ் 200 மில்லி மாங்கோசெம் 400 கிராம், காப்பர் ஆக்சி குளோரைட் 500 கிராம் ஆகிய ஏதாவதொரு பூஞ்சாணக் கொல்லியை 200 லிட்டர் நீரில் கலந்து பயிர் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
-எஸ்.எஸ்.நாகராஜன்.