கே.எஸ்.ஆர்., - யஷ்வந்த்பூர் ரயில் நிலையங்களில் 6 நடைமேடைகள்
கே.எஸ்.ஆர்., - யஷ்வந்த்பூர் ரயில் நிலையங்களில் 6 நடைமேடைகள்
ADDED : ஆக 25, 2026 01:05 AM
பெங்களூரு: பெங்களூரு ரயில் பயணியர் வசதிக்காக கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் இரண்டு; யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் நான்கு நடைமேடைகள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளன.
கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் முதல் கட்டமாக யார்டு மறுவடிவமைப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டன. அடுத்த கட்டமாக நடைமேடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு 228 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன.
அதுபோன்று யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் நோக்கில், 331.64 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக நான்கு நடைமேடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. யஷ்வந்த்பூர் வழியாக மைசூரு செல்லும் ரயில்களுக்கு வசதியாக இருக்கும். இதன் மூலம் ரயில்களின் மேலாண்மை, வருகை, புறப்பாடு ஆகியவற்றில் கூடுதல் வசதி இருக்கும்.
யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, எம்.ஜி.காலனி பகுதியின் ஒரு பகுதியை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கையகப்படுத்தப்பட்ட பகுதியில் எதிர்காலத்தில் பலமாடி கட்டடம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட உள்ளது.
