விதிகளை மீறும் பி.ஜி.,க்களுக்கு ‘நோட்டீஸ்’ வழங்க ஜி.பி.ஏ., முடிவு
விதிகளை மீறும் பி.ஜி.,க்களுக்கு ‘நோட்டீஸ்’ வழங்க ஜி.பி.ஏ., முடிவு
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 07:52 PM
பெங்களூரு: பெங்களூரில் சட்ட விரோதமாக செயல்படும் பி.ஜி., எனும் பேயிங் கெஸ்ட் மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கவும், நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கவும், கிரேட்டர் பெங்களூரு ஆணையம் முன்வந்துள்ளது.
பெங்களூரு நகரில், 25,000க்கும் மேற்பட்ட பி.ஜி.,க்கள் இயங்கி வருகின்றன. இதில், 40 சதவீதம் அதாவது 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.ஜி.பி.,க்கள் சட்ட விரோதமாக இயங்கி வருகின்றன.
சில பி.ஜி.,க்களிடம் தேவையான உரிமம், அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரை படங்கள், தீ பாதுகாப்புச் சான்றிதழ்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பி.ஜி.,க்களின் உரிமையாளர்களுக்கு சில கண்டிப்பான வழிகாட்டுதல்களை, ஜி.பி.ஏ., அறிவித்துள்ளது.
பி.ஜி.,க்களின் நுழைவு வாயிலிலும், வெளியேறும் வழியிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கேமராவில் பதிவாகும் காட்சிகள், 30 நாட்களாவது வைத்திருக்க வேண்டும்.
இங்கு குடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 70 சதுர அடி இடம் இருக்க வேண்டும். சுகாதாரமான குளியல் அறை, கழிவறை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சுத்தமான குடிநீர் வழங்கல்; பி.ஜி.,க்களில் சொந்தமாக சமையல் அறை இருந்தால், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யிடம் மூன்று மாதங்களுக்குள் உரிமை பெற வேண்டும். குடியிருப்போரின் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் ஒரு பாதுகாவலர் கட்டாயம் இருக்க வேண்டும்.
வணிக உரிமம் பெறுவதற்கு முன், தீ பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும். முதலுதவி பெட்டிகள் இருப்பது கட்டாயம்.
இதன் மூலம், விதிகள் மீறும் பி.ஜி.,க்களுக்கு முதலில், 15 நாள் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின், பெஸ்காம், குடிநீர் வாரியம் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி, நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
