UPDATED : அக் 07, 2026 12:00 AM
ADDED : அக் 06, 2026 10:36 PM

பெங்களூரு: பெங்களூரில் எஸ்.ஐ.ஆர்., பணிக்காக கூடுதலாக, 1,117 உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட சிறப்பு தேர்தல் கமிஷனர் ஷில்பா நாக் கூறி உள்ளார்.
அவர் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு மாவட்டத்தில் நடக்கும் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பான ஆட்சேபனை, கோரிக்கைகள் குறித்து விசாரிக்க, 814 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், பணிபுரிவதற்காக 1,117 உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் எஸ்.ஐ.ஆர்., தொடர்பான ஆட்சேபனைகளை விசாரிப்பர். வாக்காளர் படிவம் 6, 7 சமர்ப்பிக்கப்பட்டவுடன், தேர்தல் பதிவு அலுவலர்கள் சம்பந்தப்பட்டவரின் வீடுகளுக்கு சென்று விசாரிப்பர். ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு உட்பட்ட பகுதியில், 56 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது. வாக்காளர் படிவம் 6, 7, 8 தொடர்பாக மொத்தம் 5 லட்சத்து 42 ஆயிரத்து 893 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில், 1 லட்சத்து 2 ஆயிரத்து 712 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
