கைதியின் மனைவி மீது 'கண்' வைத்து சிக்கிய டி.ஐ.ஜி.,
கைதியின் மனைவி மீது 'கண்' வைத்து சிக்கிய டி.ஐ.ஜி.,
UPDATED : அக் 07, 2026 12:00 AM
ADDED : அக் 06, 2026 10:36 PM

பெங்களூரு: உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து, ஆயுள் தண்டனை கைதியை விடுதலை செய்ய வைத்து, தற்போது கைதாகியுள்ள சிறைத்துறை டி.ஐ.ஜி., சோமசேகர், கைதியின் மனைவி மீது கண் வைத்திருந்தது, விசாரணையில் தெரிந்தது.
தமிழகத்தின், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர் ஆறுமுகம். இவர், பெங்களூரில் குற்றங்களில் ஈடுபட்டவர். நபரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், சங்கர் ஆறுமுகம், 2001ல் கைதானார். இவருக்கு நீதிமன்றம், 2004ல் ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், தண்டனை அனுபவித்து வந்தார்.
தண்டனை குறித்து கேள்வி எழுப்பி, கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இரண்டு நீதிமன்றங்களும் அவரது மனுவை தள்ளுபடி செய்து, தண்டனையை உறுதி செய்தன.
இதற்கிடையே, 2018ல் உச்ச நீதிமன்றத்தின் பெயரில், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு கூரியரில் வந்த தபாலில், ஆயுள் தண்டனை கைதி சங்கர் ஆறுமுகத்தின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரை விடுவிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அதிகாரிகள், அவரை விடுதலை செய்தனர்.
அவர் விடுதலையாகி இத்தனை ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டு மே மாதம், சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமாருக்கு, ஒரு கடிதம் வந்தது. அதில் ஆயுள் தண்டனை கைதி சங்கர் ஆறுமுகத்தை, உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து, விடுதலை செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பின், உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் கேட்டு, தகவலை உறுதி செய்து கொண்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுத்து மைசூரில் தலைமறைவாக இருந்த சங்கர் ஆறுமுகத்தையும், சிறை ஊழியர் ஸ்ரீகாந்தையும் கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்த போது, அன்றைய சிறை கண்காணிப்பாளராக இருந்த சோமசேகர், சிறை ஊழியர் ஸ்ரீகாந்த் உதவியுடன், உச்ச நீதிமன்றம் பெயரில் போலியான உத்தரவு தயாரித்து, விடுதலையானதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, சோமசேகரை நேற்று முன் தினம் கைது செய்தனர். தற்போது இவர் சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக பதவி வகிக்கிறார். இவரிடம் விசாரித்த போது, பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
சோமசேகருக்கு, கைதி சங்கர் ஆறுமுகத்தின் மனைவி மீது கண் விழுந்தது. கணவருக்கு ஜாமின் பெற்றுத்தருவதாக ஆசை காட்டி, தன் வலையில் விழ வைத்தார். சோமசேகர் மட்டுமின்றி, ஸ்ரீகாந்தும் சங்கர் ஆறுமுகத்தின் மனைவியை பயன்படுத்தி கொண்டனர். அதன்பின் ஜாமின் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக கூறி, நழுவ முயற்சித்தனர்.
ஆனால், தன்னுடன் நெருக்கமாக இருந்தபோது, சங்கர் ஆறுமுகத்தின் மனைவி ரகசியமாக வீடியோ பதிவு செய்து கொண்டார். தன் கணவரை விடுதலை செய்யாவிட்டால், இதை பகிரங்கப்படுத்துவதாக மிரட்டினார். இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து, கைதியை விடுதலை செய்தனர்.
அதன் பிறகும், சங்கரின் மனைவிக்கு, டி.ஐ.ஜி., சோமசேகர், வீடியோ கால் செய்துள்ளார். நிர்வாணமாகும்படி கட்டாயப்படுத்தியதும், தெரிய வந்துள்ளது.
குறுக்கு வழியில் விடுதலையான சங்கர், தன் மனைவியை கை கழுவி, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த மனைவி, உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதி, சங்கர் ஆறுமுகம் முறைகேடாக விடுதலையானதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். மூவரும் கைதாக காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
சோமசேகரின் மொபைல் போனில் இருந்த வீடியோக்களை, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
