/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விதான் சவுதாவில் தற்கொலைக்கு அனுமதியுங்கள்
/
விதான் சவுதாவில் தற்கொலைக்கு அனுமதியுங்கள்
ADDED : மார் 14, 2025 06:55 AM

பெங்களூரு: ''விதான் சவுதாவில் தற்கொலை செய்ய அனுமதி கொடுத்து விடுங்கள்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் ஆவேசமாக பேசினார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று அவர், நேற்று பேசியதாவது:
முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தது, தொலைநோக்கு பட்ஜெட் இல்லை. பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. 'ஒரு சொட்டு தண்ணீர்' என்ற கவிதை பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால் புதிய பல்கலைக்கழகங்களை மூட முயற்சி செய்து, மாணவர்களுக்கு விஷம் கொடுக்க பார்க்கின்றனர்.
தங்கள் தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை என்று ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் புலம்புகின்றனர். காங்கிரஸ் உறுப்பினர் ராஜு காகே, விதான் சவுதாவில் தற்கொலை செய்யப்போவதாக கூறுகிறார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காதர், ''இங்கு தற்கொலை செய்ய அவருக்கு யார் அனுமதி கொடுக்க போகின்றனர்?'' என்றார். ''நீங்கள் கொடுத்து விடுங்கள்,'' என, சபாநாயகர் காதரை பார்த்து அசோக் கூறினார்.
கோபம் கலந்த சிரிப்புடன் அசோக்கை, காதர் பார்த்தார்.
நமது திறமை
தொடர்ந்து அசோக் பேசுகையில், ''மாநில கடனாக 7 லட்சத்து 81 ஆயிரத்து 95 கோடி ரூபாய் உள்ளது. சித்தராமையா முதல்வரான பின் 4,91,000 கோடி கடன் வந்துள்ளது.
மூலதன செலவு படிப்படியாக குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை. 2017ல் இதே சபையில் பேசிய சித்தராமையா, நம் திறமைக்கு ஏற்ப கடன் வாங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தற்போது அவரே நிறைய கடன் வாங்கி அரசியலுக்கும், வாக்குறுதித் திட்டங்களுக்கும் பயன்படுத்துகிறார். இப்படி செய்தால் பொருளாதார நிலைமை மோசம் அடைந்துவிடும். எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது.
வக்பு சொத்துகளை சீரமைக்க 150 கோடி ரூபாயும், சிறுபான்மையினர் காலனியை மேம்படுத்த 1,000 கோடி ரூபாயிலும் திட்டம் வைத்துள்ளனர். திருப்திபடுத்தும் அரசியல் செய்வதை முதலில் நிறுத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.