/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சென்னை பாடகியை மணந்த பெங்களூரு பா.ஜ., - எம்.பி.,
/
சென்னை பாடகியை மணந்த பெங்களூரு பா.ஜ., - எம்.பி.,
ADDED : மார் 07, 2025 01:04 AM

பெங்களூரு:சென்னையைச் சேர்ந்த, கர்நாடக இசை பாடகி மற்றும் பரதநாட்டிய கலைஞரான சிவஸ்ரீ, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா திருமணம் நேற்று நடந்தது. மத்திய அமைச்சர்கள், பா.ஜ., முக்கிய தலைவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, 34. கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவராகவும் உள்ளார். இவருக்கும், சென்னையைச் சேர்ந்த கர்நாடக இசை பாடகியும், பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ, 29, என்பவருக்கும், பெங்களூரு கனகபுரா ரோட்டில் உள்ள ரிசார்ட்டில் நேற்று திருமணம் நடந்தது.
காலை 9:30 மணிக்குள் இருந்து 10:15 மணிக்குள் சிவஸ்ரீ கழுத்தில், தேஜஸ்வி சூர்யா தாலி கட்டினார். முன்னதாக, காசி யாத்திரை, மாங்கல்ய ஆராதனை, லாஜா ஹோமம் செய்யப்பட்டது. திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது. மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர்கள் அர்ஜுன்ராம் மேக்வால், பிரஹலாத் ஜோஷி, சோமண்ணா, பா.ஜ., தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ், அவதோட்டா ஆசிரமத்தின் வினய் குருஜி, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா.
பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., - எம்.பி., மோகன், முன்னாள் எம்.பி.,க்கள் பிரதாப் சிம்ஹா, முனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி, வரும் 9ம் தேதி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடக்க உள்ளது.
தேஜஸ்வி சூர்யா கரம் பிடித்துள்ள சிவஸ்ரீ, பிரபல மிருதங்க வித்வான் சீர்காழி ஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தின் மகள். பரதநாட்டிய கலைஞரான இவர், சென்னை பல்கலை கழகத்தில் பரதநாட்டியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
'பொன்னியின் செல்வன் 1' திரைப்படத்தில் ஒரு பாடலையும் பாடி உள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் போது, சிவஸ்ரீ பாடிய பக்தி பாடலால் மெய்சிலிர்த்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.