/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் மனைவிக்கு ஈ.டி., சம்மன் பெங்களூரு உயர் நீதிமன்றம் ரத்து
/
முதல்வர் மனைவிக்கு ஈ.டி., சம்மன் பெங்களூரு உயர் நீதிமன்றம் ரத்து
முதல்வர் மனைவிக்கு ஈ.டி., சம்மன் பெங்களூரு உயர் நீதிமன்றம் ரத்து
முதல்வர் மனைவிக்கு ஈ.டி., சம்மன் பெங்களூரு உயர் நீதிமன்றம் ரத்து
ADDED : மார் 08, 2025 02:17 AM

பெங்களூரு:'முடா' வழக்கில் முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷுக்கு, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை, உயர் நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.
முடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் 50 க்கு 50 க்கு திட்டத்தின் கீழ், வீட்டுமனைகள் ஒதுக்கியதில் நடந்த முறைகேடு குறித்து அமலாக்கத்துறை விசாரிக்கிறது. முடா அலுவலகத்தில் இருந்து கோப்புகளை எடுத்து சென்ற, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
முதல்வர் மனைவி பார்வதிக்கு, முடா சட்ட விரோதமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதாக அளிக்கப்பட்ட தனியார் புகார் குறித்தும், அமலாக்கத்துறை விசாரணையை துவக்கியது. விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த ஆண்டு நவம்பரில் பார்வதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் பார்வதி, பைரதி சுரேஷ் மனு செய்தனர். நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார்.
* சந்தேக அடிப்படை
பார்வதி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சந்தேஷ் சவுடா தனது வாதத்தின் போது, ''எனது மனுதாரர் முடாவிற்கு 14 வீட்டுமனைகளை திரும்பி கொடுத்த அதே நாளில், அமலாக்கத்துறை விசாரணையை துவக்கியது. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் எங்கு சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்தது.
அமலாக்கத்துறை பணத்தை பறிமுதல் செய்ததா. லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்த உடன், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்கின்றனர்.
''இந்த வழக்கை விசாரிப்பதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. முடாவால் ஒதுக்கப்பட்ட அனைத்து வீட்டுமனைகள் குறித்தும் விசாரிப்பதாக கூறுகின்றனர். லோக் ஆயுக்தா விசாரித்து வரும் போது, அமலாக்கத்துறையும் விசாரிக்க முடியாது. எனவே முழு செயல்முறையை தள்ளுபடி செய்ய வேண்டும். விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்புவதற்கு அடிப்படை இருக்க வேண்டும். சந்தேகத்தின் அடிப்படையில் சம்மன் அனுப்ப முடியாது. இதனால் சம்மனை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.
சட்டத்தால் அனுமதி
பைரதி சுரேஷ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் நாகேஷ் தனது வாதத்தின் போது, ''முதல்வர் மனைவி பார்வதிக்கு முடா 14 வீட்டுமனை ஒதுக்கியதில் எந்த குற்றவியல் நடவடிக்கையும் இல்லை. எனது மனுதாரர் மீது வழக்கு பதிவாகவில்லை. அவருக்கு ஏன், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப வேண்டும். இந்த வழக்கில் அவரது பங்கு என்ன என்பதை அமலாக்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும்.
''எனது மனுதாரரின் தனியுரிமையை மீறுகின்றனர். தனியார் புகார் அடிப்படையில் விசாரிக்க முடியாது. எனது மனுதாரரின் குடும்ப உறுப்பினர்கள் விபரங்களையும், அமலாக்கத்துறை கேட்டு உள்ளது. இது சரியான நடவடிக்கை இல்லை. வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத போதும், சம்மன் அனுப்பியது ஏன்,'' என்று கூறினார்.
அமலாக்கத்துறை வக்கீல் அரவிந்த் காமத் வாதாடுகையில், ''விதிகளை மீறி முடா வீட்டுமனைகள் ஒதுக்கியதாக எங்களுக்கு புகார் வந்தது. விசாரணையை 14 வீட்டுமனைகளுக்கு மட்டும் நடத்தவில்லை. அனைத்து வீட்டுமனைகள் குறித்தும் விசாரிக்கிறோம்.
முடா விசாரணையில் நிறைய ஓட்டைகள் உள்ளன. அமைச்சர் பைரதி சுரேஷ் வீட்டுமனைகள் ஒதுக்கீட்டில் தலையிட்டாரா என்பது பற்றி விசாரிக்க வேண்டும். இதற்கு தான் சம்மன் அனுப்பி உள்ளோம். வீட்டுமனையை திருப்பி அனுப்பியதால் மட்டும் வழக்கு போய் விடாது. இது ஒரு சிவில் விசாரணை. சட்டத்தால் அனுமதிக்கப்படுகிறது,'' என்றார்.
மனு தாக்கல்
கடந்த மாதம் 20ம் தேதி மனுக்கள் மீதான விசாரணை முடிந்திருந்தது.
நேற்று தீர்ப்பு கூறிய நீதிபதி நாகபிரசன்னா, பார்வதி, பைரதி சுரேஷ் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்து தீர்ப்பு கூறினார். இதன் மூலம் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி, பைரதி சுரேஷுக்கு நிம்மதி கிடைத்து உள்ளது.