ADDED : மார் 02, 2025 06:27 AM
பெங்களூரு: ''என் அண்ணன் சிவகுமார், முதல்வராக வேண்டும் என்ற ஆசை, கனவு எனக்கும் உள்ளது. ஆனால் அதற்கு காலம் வர வேண்டும்,'' என, காங்., முன்னாள் எம்.பி., சுரேஷ் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
என் அண்ணன் சிவகுமார், முதல்வராக வேண்டும் என்ற ஆசை, கனவு எனக்கும் உள்ளது. ஆனால் அதற்கு காலம் கூடி வர வேண்டும்.
தற்போது முதல்வர் பதவி காலி இல்லை. சித்தராமையா முதல்வர் பதவியில் இருக்கிறார். பதவி காலியாக இருந்தால் மட்டுமே, அதற்காக முயற்சிக்க வேண்டும்.
ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் நிலையில், அவரை பலவந்தமாக இழுத்துவிட்டு, வேறு ஒருவரை அமர்த்த முடியாது. என் அண்ணன் முதல்வராவதை பார்க்க, எனக்கும் ஆசைதான். இதில் மூடி, மறைக்க எதுவும் இல்லை. அனைத்துக்கும் காலம் வர வேண்டும். அந்த காலம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை தானே வாழ்க்கை.
இவ்வாறு அவர் கூறினார்.