/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநில அரசை வஞ்சிக்கிறது முதல்வர் சித்தராமையா ஆவேசம்
/
மாநில அரசை வஞ்சிக்கிறது முதல்வர் சித்தராமையா ஆவேசம்
மாநில அரசை வஞ்சிக்கிறது முதல்வர் சித்தராமையா ஆவேசம்
மாநில அரசை வஞ்சிக்கிறது முதல்வர் சித்தராமையா ஆவேசம்
ADDED : பிப் 28, 2025 11:06 PM
பெங்களூரு:'மாநிலத்துக்கு நியாயமாக அளிக்க வேண்டிய வரி பங்கை, மேலும் குறைக்க மத்திய அரசு முயற்சிப்பது, ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது' என முதல்வர் சித்தராமையா சாடினார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாநிலத்தின் வரி பங்கை, 41 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக குறைக்க சிபாரிசு செய்யும்படி, நிதி ஆயோக்கிடம் கூற, மத்தியின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தயாராவதாக, செய்தி வந்துள்ளது.
நரேந்திர மோடி பிரதமரான நாளில் இருந்தே, மாநிலங்களின் அரசியல் சாசன அதிகாரங்களை பறித்து, அவற்றை பலவீனமாக்குவதை காணலாம்.
மாநிலங்கள் வரி வசூலித்து, மத்திய அரசுக்கு வழங்குகிறது. நியாயமான பங்கு கிடைக்கும்படி பார்த்துக் கொள்வது, மத்திய நிதி ஆயோக்கின் பொறுப்பாகும்.
ஆனால் மாநிலங்களின் உரிமைகளை துவம்சம் செய்ய, மத்திய அரசின் ஆயுதமாக பயன்படுவது துரதிருஷ்டவசமாகும்.
முரண்பாடு
அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது ஜனநாயகம். ஆனால் மத்திய அரசு முரண்பாடாக நடந்து கொள்கிறது.
ஆண்டுதோறும் கன்னடர்களிடம் இருந்து, நான்கு லட்சம் கோடி ரூபாய் வரி தொகை, மத்திய அரசுக்கு செல்கிறது.
இதில் மாநிலத்துக்கு திரும்ப கிடைப்பது, ரூபாய்க்கு 15 பைசா மட்டுமே. 15வது நிதி ஆயோக், வரி சதவீதத்தை 4.713 சதவீதத்தில் இருந்து, 3.64 சதவீதமாக குறைத்ததால், கர்நாடகா கடந்த ஐந்து ஆண்டுகளில், 68,775 கோடி ரூபாயை இழந்தது.
15வது நிதி ஆயோக் பணி காலம், அடுத்தாண்டு முடியவுள்ளது. இதுவரை நிதி ஆயோக் சிபாரிசு செய்திருந்த 5,495 கோடி ரூபாய் சிறப்பு நிதி, மத்திய அரசின் 6,000 கோடி ரூபாய் நிதி இன்னும் வழங்கப்படவில்லை.
நிதி ஆயோக், தான் சிபாரிசு செய்த தொகையை விட, குறைவான தொகையை மாநிலத்துக்கு வழங்கியது. 2021 - 22, 2022 -23, 2023 - 24ன் நிதி ஆண்டில், உள்ளாட்சிகளுக்கு 1,311 கோடி ரூபாய், பஞ்சாயத்து ராஜ் துறைக்கு 775 கோடி ரூபாய் குறைவான தொகையை வழங்கியது. நிதி ஆயோக் சிபாரிசு செய்த நிதியை, உடனடியாக வழங்க வேண்டும்.
சேவை வரி
கடந்த 1985 லிருந்து, சேவை வரி உயர்த்தப்படவில்லை. அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்து, சேவை வரியை உயர்த்த அனுமதி அளிக்க வேண்டும்.
மாநிலத்தில் வசூலாகும் வரியில், குறைந்தபட்சம் பாதியளவாவது மாநிலத்துக்கு வழங்க வேண்டும். அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்து, வரி சாராத வருவாயை, வரி எல்லையில் சேர்க்க வேண்டும்.
வாக்குறுதி திட்டங்களால், கன்னடர்களின் மனதில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் அரசுக்கு, எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிப்பது போன்று தோன்றுகிறது.
இதே காரணத்தால் மாநிலத்துக்கு நியாயான வரி பங்கு வழங்காமல், மாநில கருவூலத்தை காலியாக்க முற்பட்டுள்ளது. இத்தகைய அடக்குமுறை கொள்கைகளை எதிர் கொள்ளும் சக்தி மற்றும் தைரியம், மாநில அரசுக்கு உள்ளது. இந்த அநியாயத்தை மாநில மக்களும் புரிந்து கொண்டுள்ளனர்.
மாநிலத்துக்கு ஏற்பட்ட அநியாயத்தை, சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் மக்கள் வீதியில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.