/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.15,000 கோடி விடுவிக்க கான்ட்ராக்டர்கள் சங்கம் கெடு
/
ரூ.15,000 கோடி விடுவிக்க கான்ட்ராக்டர்கள் சங்கம் கெடு
ரூ.15,000 கோடி விடுவிக்க கான்ட்ராக்டர்கள் சங்கம் கெடு
ரூ.15,000 கோடி விடுவிக்க கான்ட்ராக்டர்கள் சங்கம் கெடு
ADDED : மார் 04, 2025 05:02 AM

பெங்களூரு: ''நிலுவையில் உள்ள பில் தொகையில், 15,000 கோடி ரூபாயை ஏப்ரல் மாதத்துக்குள் விடுவிக்க வேண்டும்,'' என, மாநில கான்ட்ராக்டர்கள் சங்க தலைவர் மஞ்சுநாத் எச்சரித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த பா.ஜ., ஆட்சியில், 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக, மாநில கான்ட்ராக்டர்கள் சங்கத்தினர் புகார் அளித்தனர். இதனால், அடுத்து வந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஆட்சியை இழக்க நேரிட்டது.
தவிப்பு
அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, ஏற்கனவே அறிவித்த வாக்குறுதித் திட்டங்களால், கான்ட்ராக்டர்களுக்கு நிலுவை தொகையை வழங்க முடியாமல் தவித்து வருகிறது.
இதற்கிடையில், முதல்வர், துணை முதல்வருக்கு, சங்கத்தினர் எழுதி கடிதத்தில், 'நிலுவையில் உள்ள பில் தொகையை கேட்டால், அதிகாரிகள் கமிஷன் கேட்கின்றனர். இதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் கூறிய பின், அதிகாரிகள் கூடுதலாக கமிஷன் தொகை கேட்கின்றனர்' என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு ஆலோசனை நடத்த வரும்படி, முதல்வர் சித்தராமையா, சங்கத்தினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நேற்று மாலை, கான்ட்ராக்டர்கள் சங்கத்தினர், முதல்வர் சித்தராமையாவை சந்தித்துப் பேசினர்.
பின், சங்க தலைவர் மஞ்சுநாத் அளித்த பேட்டி:
கடந்த ஆட்சிக் காலத்தை விட, இந்த ஆட்சிக் காலத்தில், அதிகாரிகள் கூடுதல் கமிஷன் கேட்பதாக முதல்வரிடம் கூறினோம். பா.ஜ., ஆட்சிக் காலத்தில் இருந்து நிலுவையில் உள்ள 30,000 கோடி ரூபாயில், ஏப்ரலில் 15,000 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். பணம் விடுவிக்கும் பட்சத்தில், எங்களின் பெரும்பாலானோரின் பிரச்னைகள் தீரும்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்ட 40 சதவீதத்தை விட கூடுதலாக வாங்குகின்றனர்.
நாங்கள் முதல்வரையோ அல்லது அமைச்சர்களையோ குறை சொல்லவில்லை. ஆனால் அதிகாரிகள் அளவில் கமிஷன் உயர்ந்துள்ளது.
எச்சரிப்பு
இதற்கு தீர்வு காண்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்; எங்கள் முன்னால், அதிகாரிகளை எச்சரிப்பதாக தெரிவித்தார்.
அரசு என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எங்களுக்கு பல பொருளாதார நெருக்கடிகள் உள்ளன. இதை நிவர்த்தி செய்ய வேண்டும். எனவே, விரைந்து பணத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டோம்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.