/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டப்பூர்வமான அறிவிப்புகளை வாட்ஸாப்பில் அனுப்ப கோர்ட் தடை
/
சட்டப்பூர்வமான அறிவிப்புகளை வாட்ஸாப்பில் அனுப்ப கோர்ட் தடை
சட்டப்பூர்வமான அறிவிப்புகளை வாட்ஸாப்பில் அனுப்ப கோர்ட் தடை
சட்டப்பூர்வமான அறிவிப்புகளை வாட்ஸாப்பில் அனுப்ப கோர்ட் தடை
ADDED : மார் 02, 2025 06:31 AM
பெங்களூரு: தமிழகம், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவன்குமார், 25. இவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், பெங்களூரு ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு வருமாறு, பவன்குமாருக்கு, போலீசார் வாட்ஸாப்பில் கடந்த மாதம் 14ம் தேதி தகவல் அனுப்பினர்.
வாட்ஸாப்பில் தகவல் அனுப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பவன்குமார் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நேற்று முன்தினம் நீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஞானேஷ், 'வாட்ஸாப் வாயிலாக சட்டப்பூர்வமான அறிவிப்புகளை அனுப்பக் கூடாது. இது சட்டத்திற்கு எதிரானது. எனவே, இந்த அறிவிப்பு செல்லாது' என வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் ரஷ்மி ஜாதவ், 'அறிவிப்பை விரைவாக அனுப்ப வேண்டும் என்பதற்காக வாட்ஸாப் வாயிலாக அனுப்பப்பட்டது' என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'சட்டப்பூர்வமான அறிவிப்புகளை, சம்பந்தப்பட்டவர்களுக்கு வாட்ஸாப் வாயிலாக போலீசார் அனுப்புவது சட்டத்திற்கு புறம்பானது. எனவே, அனுப்பக் கூடாது' என தீர்ப்பு அளித்தார்.