/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குழந்தையை கடத்தி விற்ற டாக்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
/
குழந்தையை கடத்தி விற்ற டாக்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
குழந்தையை கடத்தி விற்ற டாக்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
குழந்தையை கடத்தி விற்ற டாக்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
ADDED : பிப் 28, 2025 11:05 PM
பெங்களூரு: வாடகை தாய் மூலம் குழந்தை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி, பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்திச் சென்று, 14.5 லட்சம் ரூபாய்க்கு விற்ற பெண் மனநல மருத்துவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெங்களூரு, நாகரபாவியில் வசித்து வருபவர் ராஷ்மி, 36. மனநல மருத்துவர். இவர், ஹூப்பள்ளியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றியபோது, 2015ல் இவரை ஒரு தம்பதி சந்தித்தனர்.
'எங்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தை உள்ளதால் மன உளைச்சலில் உள்ளோம்' என்றனர்.
ரூ.14.5 லட்சம்
அதற்கு ராஷ்மி, ''கவலைப்பட வேண்டாம், வாடகை தாய் மூலம் ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்ளலாம்,'' என, நம்பிக்கை அளித்துள்ளார்.
பின், 2019ல் தம்பதியை சந்தித்த ராஷ்மி, குழந்தை பெறுவதற்காக ஆவணங்களை பெற்றுக் கொண்டார். சில நாட்களுக்கு பின், தம்பதியை தொடர்பு கொண்ட அவர், வாடகை தாய்க்கு, பெங்களூரில் ஒரு பெண்ணை ஏற்பாடு செய்துள்ளதாகவும், 2020 மே மாதத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று கூறி, தம்பதியிடம் இருந்து 14.5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார்.
சாம்ராஜ்பேட்டையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு, 2020 மே 27, 28ம் தேதிகளில் ராஷ்மி, நான்கைந்து முறை வந்து கண்காணித்துள்ளார்.
பிறந்தநாள்
மே 29ம் தேதி மீண்டும் மருத்துவமனைக்கு ராஷ்மி சென்றார். தன்னை மருத்துவமனை டாக்டராக கூறி கொண்டார். குழந்தை பெற்ற பெண்ணுக்கு மாத்திரை கொடுக்குமாறு கூறி, அவரை பார்த்துக் கொண்டிருந்தவரிடம் கொடுத்துள்ளார்.
பெண்ணுடன் இருந்தவர் வெளியே சென்ற நேரத்தில், ஆண் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டார். பின், பெங்களூரு விஜயநகரில் உள்ள தன் நண்பரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே இருந்த, குழந்தைக்காக பணத்தை கொடுத்திருந்த தம்பதியிடம் ஒப்படைத்தார்.
இதற்கிடையில், மருத்துவமனையில் கண்விழித்த பெண், தன் அருகில் குழந்தை இல்லாதது குறித்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த சாம்ராஜ்பேட்டை போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
700 பேரிடம் விசாரணை நடத்தி, 300 கண்காணிப்பு கேமாராக்கள் பதிவு, 5,000 பேரின் மொபைல் போன் பதிவுகளை ஆய்வுசெய்து, 2021 மே 29ம் தேதி, கர்நாடகாவின் வட மாவட்டத்தை சேர்ந்த தம்பதியின் அட்ரசை கண்டுபிடித்தனர்.
தங்கள் குழந்தை என நினைத்து முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடிக் கொண்டிருந்த தம்பதியிடம் போலீசார், விஷயத்தை கூறியதும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தீர்ப்பு
அவர்கள் கொடுத்த தகவலின்படி, மனநல மருத்துவர் ராஷ்மியை கைது செய்தனர்.
இவ்வழக்கு பெங்களூரு சிட்டி நீதிமன்ற நீதிபதி சி.பி.சந்தோஷ் முன்னிலையில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்கையும் கேட்ட நீதிபதி, பிப்., 19ம் தேதி, 'ராஷ்மிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு அளித்தார்.
அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் பாஸ்கர் கூறியதாவது:
குழந்தையை பெற்றெடுத்த தம்பதி, தங்கள் மகன் இனி திரும்பி வரப்போவதில்லை என்று நம்பிக்கை இழந்துவிட்டனர்.
ஆனால், ஓராண்டுக்கு பின், பறிகொடுத்த குழந்தையை மீண்டும் அவர்களின் கண் முன் காண்பித்தபோது, அவர்கள் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அதுபோன்று, ராஷ்மியால் ஏமாற்றப்பட்ட தம்பதியும், அக்குழந்தை மீது மிகவும் பாசம் வைத்துள்ளனர். உண்மையை அறிந்ததும் வேதனை அடைந்தனர்.
பணம் பறிகொடுத்த வலியை விட, குழந்தையை இழந்தது அவர்களை மிகவும் காயப்படுத்தி உள்ளது.
டி.என்.ஏ., சோதனையில் குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரிந்துவிட்டது. தம்பதியிடம் இருந்து ராஷ்மி 14.5 லட்சம் ரூபாய் பணம் பெற்றது, வங்கி பரிவர்த்தனை மூலம் நிரூபணமாகி உள்ளது. மொபைல்போன் உரையாடலும் உறுதி செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.