/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தண்ணீர் பிரச்னை தீர்க்க குடிநீர் வாரியம் 'ஐடியா'
/
தண்ணீர் பிரச்னை தீர்க்க குடிநீர் வாரியம் 'ஐடியா'
ADDED : மார் 04, 2025 04:46 AM
பெங்களூரு: கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கு, புதிதாக 55 இடங்களில் காவிரி இணைப்பு மையங்கள் உருவாக்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் கோடைகாலத்தின்போது தண்ணீர் பிரச்னை தலை துாக்கும். பெங்களூரின் 80 வார்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் 25 மீட்டருக்கும் கீழே சென்றுவிடும் என, சமீபத்தில் இந்திய அறிவியல் மையம் எச்சரித்தது.
இந்நிலையில் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் அறிக்கை:
கோடையில் தண்ணீர் பிரச்னை வராமல் தடுப்பதற்கு, பெங்களூரு குடிநீர் வாரியம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக, 110 கிராமங்கள் உட்பட நகரின் பல பகுதிகளில், 55 காவிரி இணைப்பு மையங்கள் உருவாக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, பெரிய அளவிலான தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் சேகரிக்கப்படும். இந்த தொட்டிகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படும். தண்ணீர் தேவைப்படுவோர், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, 90 ரூபாய் செலுத்தி 1,000 லிட்டர் தண்ணீரை பெற்றுக் கொள்ளலாம். சொந்த வாகனத்திலோ அல்லது குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான வாகனம் மூலம் தண்ணீரை கொண்டு செல்லலாம். பதிவு செய்யும்போது நேரம், இடம் குறித்த அடிப்படை தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, இந்த 110 கிராமங்களில் வெறும் 17,000 பேர் மட்டுமே காவிரி இணைப்புகளை பெற்று உள்ளனர். மீதமுள்ளோர் நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர். இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என கூறப்படுகிறது.