/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பொறியாளர் குடும்பத்தினர் மனு தள்ளுபடி
/
பொறியாளர் குடும்பத்தினர் மனு தள்ளுபடி
ADDED : பிப் 22, 2025 05:14 AM
பெங்களூரு: பெங்களூரு, மாரத்தஹள்ளியில் வசித்து வந்த உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அதுல் சுபாஷ், 34, தற்கொலை செய்து கொண்டார். தன் தற்கொலைக்கு மனைவியும், அவரது குடும்பமும் காரணம் என்பதை வீடியோவாக பதிவிட்டிருந்தார். இது தேசிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தியது.
3 பேருக்கு ஜாமின்
அதுல் சுபாஷின் சகோதரர் பிகாஸ் குமார், மாரத்தஹள்ளி போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா, மாமியார் நிஷா சிங்கானியா, மைத்துனர் அனுராக் சிங்கானியாவை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட மூவரும், ஜாமினில் வந்தனர்.
இதற்கிடையில் தங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, மூவரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு நீதிபதி கிருஷ்ணா முன் நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது மூன்று பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வழக்கை ரத்து செய்யும்படி தாக்கல் செய்த மனுவை, வாபஸ் பெறுகிறோம்' என தெரிவித்தார். இதையடுத்து அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதேவேளையில், நிகிதாவின் உறவினர் சுசில் குமார் சிங்கானியா, மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், 'தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷிடம், ஓராண்டாக எந்தவித தொடர்பும் இல்லை. கடிதத்தில் என் பெயர் இருப்பது, ஊடகத்தின் மூலம் தான் தெரிந்து கொண்டேன். அவரின் தற்கொலைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே என் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இடைக்கால தடை
அப்போது சுசில் குமார் சிங்கானியா தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ''அதுல் சுபாஷ் தற்கொலை கடிதத்தில், அவரின் பெயர் இருந்ததால், அவர் மீதும் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், அந்த கடிதத்தில் முழுக்க முழுக்க அதுலின் மனைவி, அவரது குடும்பத்தினர் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளார். எனது மனுதாரருக்கு 70 வயதாகிறது,'' என்றார்.
ஆவணங்களை பரிசீலித்த நீதிபதி, 'சுசில் குமார் சிங்கானியாவிடம் விசாரணை தொடர, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என்றார். இது தொடர்பாக அதுல் சுபாஷின் சகோதரர் பிகாஸ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கு விசாரணையை, பிப்., 26க்கு ஒத்தி வைத்தார்.