/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அனைத்து துறையிலும் கர்நாடகா சாதனை கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம்
/
அனைத்து துறையிலும் கர்நாடகா சாதனை கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம்
அனைத்து துறையிலும் கர்நாடகா சாதனை கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம்
அனைத்து துறையிலும் கர்நாடகா சாதனை கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம்
ADDED : மார் 04, 2025 04:51 AM

பெங்களூரு: ''அரசின் நலத் திட்டங்களால், வளர்ச்சியில் கர்நாடகா பின் தங்கி உள்ளதாகவும், நிதி மேலாண்மை சீர்கெட்டுள்ளது என்றும் பலர் கணித்தனர். ஆனால், அந்த கணிப்பை அரசு பொய்யாக்கி உள்ளது. ஒவ்வொரு துறையிலும் அரசு சாதனை படைத்துள்ளது. மாநிலத்தின் வருவாய் அதிகரித்து வருகிறது,'' என, கவர்னர் தாவர்சந்த் கெலாட், காங்கிரஸ் அரசு குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
கர்நாடகாவில் 2025ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. வரும் 21ம் தேதி வரை நடக்க உள்ளது.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், மரபுப்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட், சட்டசபை, மேலவை கூட்டு கூட்டத்தில் நேற்று உரையாற்றினார்.
கடை கோடி நபர்
கவர்னர் நிகழ்த்திய உரை:
என்னுடைய அரசு, மாநில வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்தியும், நிதி நிர்வகிப்பையும் முறைப்படுத்துவதில் வெற்றி அடைந்துள்ளது. மகாத்மா காந்தி கூறியது போல், அரசு என்பது, கடை கோடி நபரின் கண்ணீரை துடைப்பதற்கு பயன்பட வேண்டும்.
அரசின் நலத் திட்டங்களால், வளர்ச்சியில் பின் தங்கி உள்ளதாகவும், நிதி மேலாண்மை சீர்கெட்டுள்ளது என்றும் பலர் கணித்தனர். ஆனால், அந்த கணிப்பை அரசு பொய்யாக்கி உள்ளது. ஒவ்வொரு துறையிலும் அரசு சாதனை படைத்துள்ளது. மாநிலத்தின் வருவாய் அதிகரித்து வருகிறது.
அதிக அளவில் தனியார் முதலீடு குவிகிறது. நலத் திட்டங்களால், மக்களின் வருவாய் பெருகுகிறது. வெளிநாட்டு முதலீட்டில் கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஜி.எஸ்.டி., வசூல் அதிகரித்துள்ளது.
கடந்த 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 344 அறிவிப்புகளில், 331 அறிவிப்புகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள அறிவிப்புகளுக்கும் விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும்.
கர்நாடகா மாதிரி
கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால், விளைச்சல் அதிகரித்தது. அரசின் திட்டங்களால், விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன. தேவைப்படும் இடங்களில், விவசாய குட்டைகள் அமைக்கப்படும். கே.எம்.எப்., சார்பில், ஒரு நாளுக்கு ஒரு கோடி லிட்டர் சேகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் மரணமடைந்த ஆடு, மாடுகளுக்காக 26.60 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல், 5 வாக்குறுதித் திட்டங்களுக்காக 70,000 கோடி ரூபாய், பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தியுள்ளது. வளர்ச்சியில் கர்நாடகா சிறப்பு மாதிரியை உருவாக்குகிறது.
ஜி.எஸ்.டி., வசூல்
கர்நாடகா மாதிரி வளர்ச்சி என்பது, மக்களை மையமாக கொண்ட பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார நிர்வாகத்தை உருவாக்குவதாகும். கர்நாடகா மாதிரியை, உலகின் பல பொருளாதார நிபுணர்கள், பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி செய்கின்றனர்.
ஐ.நா., சபையின் முக்கியஸ்தரே கர்நாடகாவுக்கு வந்து, நம் திட்டங்களை பாராட்டியுள்ளார். பகுதி வளர்ச்சி சமத்துவமின்மையை நீக்குவதற்காக, ஆராய்ச்சி செய்து, அறிக்கை தாக்கல் செய்ய பொருளாதார நிபுணர் டாக்டர் கோவிந்த்ராவ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்குள் அறிக்கை பெறப்பட்டு, அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சமீபத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதில், 19 நாடுகள் பங்கேற்றன. 10.27 லட்சம் கோடி ரூபாய் முதலீடுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 2024 - 25 பட்ஜெட்டில், 15.01 சதவீதம் நிதி, முதலீடு செலவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, தமிழகம், மஹாராஷ்டிரா, தெலுங்கானா செலவிடும் தொகையை விட அதிகம்.
நடப்பு கணக்காண்டில், கடந்த டிசம்பர் வரையில் 13 சதவீதம் வருவாய் பெருகியுள்ளது. ஜி.எஸ்.டி., வசூலில் நாட்டிலேயே 2ம் இடத்தில் உள்ளோம். இதிலும், 12 சதவீதம் உயர்வை கண்டுள்ளோம்.
சிறிய நிதி நிறுவனங்கள் மூலம், ஏழைகளுக்கு ஏற்படும் தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.
கடலில் விபத்து ஏற்படும் போது, மீனவர்களை காப்பாற்றுவதற்காக, கடல் ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். முதலீட்டை அதிகரிக்கும் வகையில், கர்நாடக தொழில் கொள்கை 2024 - 25 அமல்படுத்தப்பட்டுள்ளது.
2வது விமான நிலையம்
விஜயபுராவில் 347 கோடி ரூபாயில் அமைக்கப்படும் விமான நிலையம், நடப்பாண்டிலேயே பயன்பாட்டுக்கு வரும். மைசூரு விமான நிலையத்தில், 319 கோடி ரூபாயில் 2வது ஓடுதளத்தையும்; ராய்ச்சூரு விமான நிலையம் 219 கோடி ரூபாயிலும் மேம்படுத்தப்படும்.
தர்மஸ்தலா, மடிகேரி, சிக்கமகளூரில் விமான நிலையங்கள் அமைப்பதற்கு இடம் அடையாளம் காணப்படும். பெங்களூரில் 2ம் விமான நிலையம் அமைப்பதற்கான பணி நடக்கிறது. கார்வார் கப்பற்படை அருகில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
மாநிலத்தில் நடந்து வரும் 66 கி.மீ., துாரத்துக்கான ரயில்வே இரட்டை வழிப்பாதை ஆகஸ்டில் நிறைவுபெறும்.
மத்திய, மாநில அரசுகளின் 15,767 கோடி ரூபாய் நிதியுதவியுடன், 148.17 கி.மீ., துாரத்துக்கான பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
மைசூரு மன்டகல்லில் உள்ள கர்நாடக திறந்தநிலை பல்கலையில், 30 கோடி ரூபாயில், சர்வதேச தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும். பெங்களூரு தொழில்நுட்ப வட்ட மேசை மாநாட்டில், 51 நாடுகளில் இருந்து, 35,000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பெங்களூரு நகரில் பசுமை பகுதியை பாதுகாக்கும் வகையிலும்; அபூர்வ பறவைகள் பாதுகாக்கவும் ஹெசரகட்டா ஏரியின் 5,678 ஏக்கர் பகுதியை, கிரேட்டர் ஹெசரகட்டா பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எலஹங்கா மாதப்பனஹள்ளியின் 153 ஏக்கரில், பெரிய பூங்கா அமைக்கப்படும்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், யு.பி.எஸ்.சி., - கே.பி.எஸ்.சி., வங்கி, ராணுவம் போன்ற தேர்வுகளுக்கு, கொப்பால் மாவட்டம், கனககிரியிலும், கலபுரகியிலும் பயிற்சி பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.
டபுள் டெக்கர்
பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில், டபுள் டக்கர் மாதிரியில், மெட்ரோ ரயில் மற்றும் சாலை மேம்பாலம் அமைக்கப்படும். முதல் கட்டமாக, 8,916 கோடி ரூபாயில், 40.50 கி.மீ., துாரம் அமைக்கப்படும்.
பறக்கும் வட்ட சாலை அமைப்பதற்கு தேவையான 27,000 கோடி ரூபாய் நிதியை, ஹட்கோ நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும். இதற்காக, 2,565 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும்.
சில்க் போர்டு - கே.ஆர்.புரம் - விமான நிலையம்; கெம்பாபுரா - ஜே.பி. நகர்; ஹொசஹள்ளி - கடபகெரே இடையே நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகள், 2029 டிசம்பரில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
பெங்களூரு நகரில் கூடுதலாக 6 டி.எம்.சி., காவிரி நீர் வினியோகிக்க, 6,939 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 1924ல் பெலகாவியில் காந்தி நடத்திய காங்கிரஸ் மாநாட்டின் நுாற்றாண்டு விழாவை ஒட்டி, 'கர்நாடகா முழுதும் வீடுதோறும் காந்தி' என்ற திட்டம் மூலம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
சட்டம் - ஒழுங்கு
சவதத்தி எல்லம்மா கோவிலில், திருப்பதி போன்று, பக்தர்கள் வரிசையில் நிற்பதற்காக வரிசை கூடாரம் அமைக்கப்படும். ரோப் வே அமைக்கப்படும். தேவிகா ராணி நிகோலஸ் ரோரிச் 572 ஏக்கர் எஸ்டேட்டை, சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கு, 100 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும்.
மாநிலத்தில் கடந்த 19 மாதங்களாக பெரிய அளவில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. போலீஸ் நிலையங்கள், மக்கள் நண்பனாக பணியாற்றுகின்றன. சைபர் குற்றங்கள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பொருளாதாரம், சமூகம், பாரம்பரியத்தை காப்பதுடன், ஒட்டுமொத்த மாநில வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் அமைப்புக்கு ஏற்ப அரசு செயல்படுகிறது. அனைவருக்கும் அமைதி, அனைவருக்கும் வளர்ச்சி என்பது அரசியல் அமைப்பின் நியதி. அந்த நியதியை தவறாமல் அரசு கடைப்பிடிக்கிறது.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
பூஜ்ய சாதனை!
மாநில காங்கிரஸ் அரசு வளர்ச்சியில் பூஜ்ய சாதனை செய்துள்ளது. ஆனால், கவர்னர் மூலம், அரசு பொய் சொல்ல வைத்துள்ளது. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு, உதயகிரி கலவரம், ஏ.டி.எம்., கொள்ளை சம்பவம் போன்றவையே சாட்சி. வளர்ச்சியில் சாதனை படைத்துள்ளோம் என்று கூறுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
அசோக்,
எதிர்க்கட்சித் தலைவர், சட்டசபை
நட்டு, போல்டு லுாசு!
வளர்ச்சி விஷயத்தில், அரசின் நட்டு, போல்டு லுாசாகி உள்ளது. அரசு பச்சை பொய் சொல்ல வைத்துள்ளது. இதன் மூலம், கவர்னரின் நேரத்தை விரயமாக்கியுள்ளது. வளர்ச்சியே நடக்கவில்லை. காங்கிரஸ் அரசின் செயல்பாட்டால், ஏழை மக்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீண் வீராப்பு தேவையில்லாதது.
விஜயேந்திரா,
மாநில தலைவர், பா.ஜ.,