'கிரேட்டர்' பெங்களூரு ஆணையம்: மேயர்கள் அதிகாரம் அம்போ?
'கிரேட்டர்' பெங்களூரு ஆணையம்: மேயர்கள் அதிகாரம் அம்போ?
ADDED : ஜூலை 24, 2024 11:56 PM

பெங்களூரு : 'கிரேட்டர்' பெங்களூரு ஆணையம் அமைத்த பின், பெங்களூரு மாநகராட்சிகளின் அதிகாரம் பறிக்கப்படும். புதிய ஆணையத்தின் தலைவராக முதல்வரே இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டசபையில் துணை முதல்வர் சிவகுமார் தாக்கல் செய்த, கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்ட மசோதாவில் என்ன உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு மாநகராட்சியில் 225 வார்டுகள் உள்ளன. புதிய மசோதாவின் படி, 400 வார்டுகள் வரை உயர்த்தலாம்.
இதன் மூலம் 10 மாநகராட்சிகள் வரை உருவாக்கலாம். ஒவ்வொரு மாநகராட்சியிலும் மக்கள் தொகை எண்ணிக்கை 10 லட்சத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும். பெங்களூரின் அண்டைய மாவட்டங்களை சேர்த்து, 'கிரேட்டர் பெங்களூரு' என உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
இதனால், நில பயன்பாடு மற்றும் மேம்பாட்டு வரைபடத்தை அங்கீகரிக்கும் அதிகாரத்தை பி.டி.ஏ., எனும் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் இழந்துவிடும். அரசு வெளியிடும் நிதியில், எந்தெந்த மாநகராட்சிக்கு எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை கிரேட்டர் பெங்களூரு ஆணையமே முடிவு செய்யும்.
தலைவர் முதல்வர்
பெரிய மேம்பாலங்கள், விரிவாக்கம் செயயப்பட்ட சாலைகள், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, மழைநீர் கால்வாய்கள் பராமரிப்பு, குடிநீர் வினியோகம் ஆகியவை கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் வரும்.
இந்த ஆணையத்தின் தலைவராக முதல்வர், துணைத் தலைவராக பெங்களூரு நகர பொறுப்பு அமைச்சர், உறுப்பினர்களாக உள்துறை, நகர்ப்புற வளர்ச்சி, போக்குவரத்து, மின் துறை அமைச்சர்கள், பெங்களூரு எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி மேயர்கள்.
பி.டி.ஏ., கமிஷனர், குடிநீர் வாரிய தலைவர், பி.எம்.டி.சி., -பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர்கள், பெஸ்காம் இயக்குனர், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர், பெங்களூரு பெருநகர நில போக்குவரத்து ஆணையத்தின் சி.இ.ஓ., பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிர்வாக இயக்குனர், தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை இயக்குனர் ஆகியோரும் இருப்பர்.
வருவாயில் பங்கு
மாநகராட்சி, பி.டி.ஏ., குடிநீர் வாரியம், மெட்ரோ, போக்குவரத்து போலீஸ் உள்ளிட்ட பெங்களூரு தொடர்பான அனைத்து துறைகளும், கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் செயல்படும்.
முன்னாள் தலைமை செயலர் பி.எஸ்.பாட்டீல் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையில், மாநகராட்சியை ஐந்தாக பிரித்து, தலா ஒரு மேயர், தலா ஒரு துணை மேயர் நியமிக்கப்படுவர்.
இவர்களின் பதவி ஐந்தாண்டுகள். ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ஒரு கமிஷனரை அரசு நியமிக்கும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, தலைவர் அல்லது துணைத் தலைவர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும். மாநகராட்சிகள் வசூலிக்கும் வருவாயில் ஒரு பங்கை, கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு கொடுக்க வேண்டும்.
நிலை குழுக்கள்
இந்த ஆணையம் அமைத்தால் தொழில் முதலீடு அதிகரிக்கும். பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கப்படும். இந்நிறுவனம் பெங்களூரு நகர்புற வளர்ச்சி அமைச்சர் தலைமையில் செயல்படும். முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில், இந்நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும்.
கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உருவாக்கப்பட்ட பின்னர் நடக்கும் முதல் கூட்டத்தில், மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு மாநகராட்சியிலும் ஆறு நிலைக் குழுக்கள் அமைக்கப்படும்.
இந்த நிலைக் குழுவில் தலா ஐந்து உறுப்பினர்கள் இடம் பெறுவர். அவர்களில் ஒருவர் தலைவராக இருப்பார். இவர்களின் பதவி காலம் 30 மாதங்கள் இருக்கும்.
இவ்வாறு சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியை ஐந்தாக பிரிக்கவும், 400 வார்டுகளை உருவாக்கவும் அரசிடம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான சட்டத்தை உருவாக்க வேண்டும்.