ஐ.ஏ.எஸ்., ஞானேந்திரகுமார் சிறையில் அடைப்பு: பெண் தேர்வர் வீட்டில் சி.ஐ.டி., சோதனை
ஐ.ஏ.எஸ்., ஞானேந்திரகுமார் சிறையில் அடைப்பு: பெண் தேர்வர் வீட்டில் சி.ஐ.டி., சோதனை
ADDED : செப் 09, 2026 11:49 PM

பெங்களூரு: கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வு முறைகேடு வழக்கில், கைதான ஐ.ஏ.எஸ்., ஞானேந்திரகுமார், பா.ஜ., பிரமுகர் பசவராஜ் கன்னாலே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண் தேர்வர் வீட்டில் சி.ஐ.டி., சோதனை நடத்தியது.
கால்நடை மருத்துவ அதிகாரி பதவி தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி விசாரிக்கும், சி.ஐ.டி., போலீசார், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமாரை கடந்த மாதம் 30ம் தேதியும்; பா.ஜ., பிரமுகர் பசவராஜ் கன்னாலேயே 31ம் தேதியும் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
தேர்வர்களிடம் பணம் வாங்கியது உள்ளிட்ட விஷயங்கள், விசாரணையில் தெரிந்தது.
இருவரின் போலீஸ் காவலும் நேற்று நிறைவு பெற்ற நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸ் தரப்பு அனுமதி கேட்கவில்லை. இதனால் இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி மஞ்சுநாத் உத்தரவிட்டார். இருவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், கே.பி.எஸ்.சி., உறுப்பினர் சாந்தா ஹொசமணி மூலம், தேர்வில் வெற்றி பெற பணம் கொடுத்ததாக, கலபுரகி டவுன் ஒசா லே - அவுட்டில் வசிக்கும், தேர்வர் மமதா வீட்டில் சி.ஐ.டி., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். விசாரணைக்கு ஆஜராக சம்மன் கொடுத்தனர்.
