/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜெ.,யின் 27 கிலோ தங்க, வைர நகைகள் ஒப்படைப்பு! : தமிழகத்திடம் வழங்கிய பெங்களூரு கோர்ட்
/
ஜெ.,யின் 27 கிலோ தங்க, வைர நகைகள் ஒப்படைப்பு! : தமிழகத்திடம் வழங்கிய பெங்களூரு கோர்ட்
ஜெ.,யின் 27 கிலோ தங்க, வைர நகைகள் ஒப்படைப்பு! : தமிழகத்திடம் வழங்கிய பெங்களூரு கோர்ட்
ஜெ.,யின் 27 கிலோ தங்க, வைர நகைகள் ஒப்படைப்பு! : தமிழகத்திடம் வழங்கிய பெங்களூரு கோர்ட்
ADDED : பிப் 15, 2025 12:00 AM

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க, வைர நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி நேற்று துவங்கியது. பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் முன்னிலையில், மூன்று பெட்டிகளில் இருந்த நகைகள் எண்ணி சரிபார்க்கப்பட்டன. இன்று, மேலும் மூன்று பெட்டிகளில் உள்ள நகைகள் ஒப்படைக்கப்படுகின்றன.
தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதனால், இவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், சொத்து ஆவணங்கள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.
'அந்த நகைகளை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை கர்நாடக அரசின் கருவூலத்தில் சேர்க்க வேண்டும்' என்று, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிபதி, மோகன் விசாரித்தார்.
பலத்த பாதுகாப்பு
விசாரணை முடிந்து நீதிபதி மோகன், ஜன., 29ல் அளித்த தீர்ப்பில், 'ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய ஆறு டிரங்க் பெட்டிகள், 1,562 ஏக்கர் நிலப்பத்திரங்களை தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம், பிப்ரவரி 14, 15ம் தேதிகளில் கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும்.
'பொருட்களை எடுத்து செல்ல, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெட்டிகளுடன் வர வேண்டும்' என, உத்தரவிட்டார்.
இதன்படி, தமிழக உள்துறை இணை செயலரான ஆனி மேரி சுவர்ணா ஐ.ஏ.எஸ்., லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., புகழ்வேந்தன், 'எஸ்கார்ட்' உதவி கமிஷனர் சுப்பிரமணியன்.
இன்ஸ்பெக்டர்கள் கோவர்த்தன், மணிகுமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று முன்தினம் இரவே பெங்களூரு வந்து ஹோட்டல்களில் தங்கினர்.
நேற்று காலை தலைமை செயலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து, மொத்தமுள்ள ஆறு பெட்டிகளில், நான்கு பெட்டிகள் எடுத்து வரப்பட்டு, நீதிமன்றத்திற்கு சொந்தமான வேனில் ஏற்றப்பட்டன.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன. காலை 11:00 மணிக்கு நகைகள் எண்ணும் பணி துவங்க இருந்தது.
மதிப்பீடு
அப்போது, ஜெ., வாரிசான தீபா தரப்பு வக்கீல் ஸ்ரீ வத்சலா, ''ஜெ., நகைகளை தனக்கு வழங்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் தீபா தாக்கல் செய்த மனு மீது இன்று (நேற்று) விசாரணை நடக்கிறது. அங்கு உத்தரவு வரும் வரை, நகைகள் எண்ணுவதை ஒத்திவைக்கலாம்'' என்று மனு தாக்கல் செய்தார்.
மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி மோகன், ''உச்ச நீதிமன்றத்தில் இருந்து இன்னும் உத்தரவு வரவில்லை. வந்தால் பார்த்து கொள்ளலாம். இப்போதைக்கு நகைகள் எண்ணும் பணியை துவங்கலாம்,'' என்றார்.
இதையடுத்து, காலை 11:30 மணிக்கு நகைகளை எண்ணும் பணி துவங்கியது. நீதிபதி மோகன், தமிழக அதிகாரிகள், பெங்களூரு மத்திய மண்டல டி.சி.பி., சேகர், தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட நகை மதிப்பீட்டாளர், வீடியோகிராபர், சில போலீசார் மட்டும் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அறையின் கதவு அடைக்கப்பட்டது. அறையின் முன், போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீதிபதி மோகனிடம் என்னென்ன நகைகள் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டது. அவர் பட்டியலை வாசிக்க, நகை மதிப்பீட்டாளர், மதிப்பீடு செய்தார். பின், நகைகள் மீண்டும் பெட்டிக்குள் வைக்கப்பட்டன.
மொத்தம் 481 வகையான நகைகளில், 155 மட்டும் மதியம் 2:00 மணி வரை எண்ணப்பட்டிருந்தன.
மதிய உணவு இடைவேளைக்கு பின், மீதமுள்ள நகைகள் எண்ணப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், மதிய உணவை நீதிமன்ற அறைக்கே வரவழைத்து, அனைவரும் சாப்பிட்டனர்.
மாலை 5:45 மணிக்கு எண்ணப்பட்ட நகைகள் அடங்கிய பெட்டிகளை, ஒரு டிராலியில் வைத்து போலீசார் எடுத்து வந்தனர். டிராலியில் நான்கு பெட்டிகள் இருந்தன. அதில், மூன்று பெட்டிகளில் இருந்த 290க்கும் மேற்பட்ட நகைகள் மட்டுமே எண்ணப்பட்டிருந்தன.
மீதமுள்ள ஒரு பெட்டியில் இருந்த நகைகளை எண்ண நேரம் இல்லை. நகைகள் இருந்த பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு, தலைமை செயலக கருவூலத்தில் மீண்டும் வைக்கப்பட்டன. எண்ணப்படாத மூன்று பெட்டிகளில் உள்ள நகைகள் இன்று எண்ணப்படுகின்றன.
எதிர்பார்ப்பு
இப்பணி முடிந்ததும், தமிழக போலீசார் வந்த வாகனங்களில் ஆறு பெட்டிகளும் ஏற்றப்படும்.
அத்திப்பள்ளி வரை தமிழக போலீசாரை அழைத்து செல்லும் பொறுப்பு, கர்நாடகாவின் ஹலசூரு கேட் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள், இன்று நள்ளிரவு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தமுள்ள ஆறு பெட்டிகளிலும், 27 கிலோ தங்கம், வைர நகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. 1996ல் பறிமுதல் செய்த போது அதன் மதிப்பு, 3.47 கோடி ரூபாய். தற்போது இதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது.