ADDED : செப் 02, 2026 11:06 PM
பெங்களூரு: ''கே.பி.எஸ்.சி., நடத்திய கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வில், முறைகேடு செய்து வெற்றி பெற்றதை, சி.ஐ.டி., முன், 7 தேர்வர்கள் ஒப்பு கொண்டுள்ளனர். கே.பி.எஸ்.சி.,யில் நடத்த அனைத்து ஊழல்களின் பிதாமகன், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தான்,'' என்று, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
புகைப்படங்கள் கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார் கங்குவார், பா.ஜ., பிரமுகர் பசவராஜ் கன்னாலே ஆகியோரை, சி.ஐ.டி., கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்கிறது.
பா.ஜ., தலைவர்கள் சிலருடன் பசவராஜ் எடுத்து கொண்ட புகைப்படங்கள், நேற்று முன்தினம் வெளியான நிலையில், நேற்றும் ஏராளமான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
குறிப்பாக, மத்திய தொழிலாளர் நல இணை அமைச்சர் ஷோபாவை காரில் அமர வைத்து, பசவராஜ் கார் ஓட்டிய புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிக்கணக்கு விபரம் இதற்கிடையே, தேர்வில் வெற்றி பெற்ற ஏழு பேர் நேற்று சி.ஐ.டி., விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, முறைகேடு செய்து தேர்வில் வெற்றி பெற்றதை ஒப்பு கொண்டதுடன், தலா, 40 லட்சம் ரூபாய் முதல், 80 லட்சம் ரூபாய் வரை வழங்கியதையும் கூறினர்.
இதையடுத்து, பீதர் மாவட்டம் பால்கியில் உள்ள வங்கியில், பசவராஜ் கன்னாலேயின் வங்கிக்கணக்கு விபரங்களை, போலீசார் நேற்று சரிபார்த்தனர். சில ஆவணங்களை கைப்பற்றினர்.
முறைகேடு குறித்து முதல்வர் சிவகுமார், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
கே.பி.எஸ்.சி.,யில் நடந்த ஊழலில் பா.ஜ., தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, சி.ஐ.டி., அதிகாரிகளிடம் போதுமான தகவல்கள் உள்ளன. என்னிடம் இன்னும் முழு விசாரணை அறிக்கை வரவில்லை.
கே.பி.எஸ்.சி., தலைவராக சிவசங்கரப்பா சாகுகரை, பா.ஜ., தான் நியமித்தது. கே.பி.எஸ்.சி.,யில் நடந்த அனைத்து ஊழல்களின் பிதாமகன், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள் தான்.
இதுதொடர்பான ஆவணங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும். சிவசங்கரப்பா சாகுகருடன் தொடர்பில் இருந்த பா.ஜ., தலைவர்கள் பற்றி விசாரணை நடத்தப்படும். சிவசங்கரப்பாவை, கவர்னர் தான் சஸ்பெண்ட் செய்தார்.
கட்சியில் இருக்கும் பிரச்னைகள் வெளியே தெரியாமல் இருக்க, எங்களுக்கு எதிராக பா.ஜ., தலைவர்கள் பாதயாத்திரை நடத்துகின்றனர். நாங்களும் அமைதியாக இருக்க மாட்டோம்; எங்கள் அரசியலை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
