ராகுல் மீதான வழக்கை கண்டித்து காங்., கட்சியினர் போராட்டம்
ராகுல் மீதான வழக்கை கண்டித்து காங்., கட்சியினர் போராட்டம்
ADDED : செப் 02, 2026 11:07 PM

பெங்களூரு: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, பெங்களூரில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது.
பட்டியல் ஜாதி சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், உத்தரகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை கண்டித்து, பெங்களூரு சுதந்திர பூங்காவில் காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
அரசியல் காரணங்களுக்காக ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். முதல்வர் சிவகுமார் பேசுகையில், ''ராகுல் போராளியாக பிறந்து, போராளியாகவே வாழ்கிறார்.
''நுாறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் அவர் அஞ்ச மாட்டார். மன்னிப்பும் கேட்க மாட்டார். எதிர்க்கட்சிகள் குரலை ஒடுக்க, பா.ஜ., முயற்சிக்கிறது,'' என்றார்.
அரசியல்ரீதியாக ராகுலை ஒழிக்க, பா.ஜ., அரசு முயற்சிப்பதாக, சித்தராமையா குற்றம் சாட்டினார்.
