/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ ரயில் தினசரி பயணியர் எண்ணிக்கை 5 லட்சமாக குறைவு
/
மெட்ரோ ரயில் தினசரி பயணியர் எண்ணிக்கை 5 லட்சமாக குறைவு
மெட்ரோ ரயில் தினசரி பயணியர் எண்ணிக்கை 5 லட்சமாக குறைவு
மெட்ரோ ரயில் தினசரி பயணியர் எண்ணிக்கை 5 லட்சமாக குறைவு
ADDED : மார் 04, 2025 05:00 AM
பெங்களூரு: பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் என்ற, மிகப்பெரிய பிரச்னையை சமாளிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது மெட்ரோ ரயில் சேவை. மைசூரின் ரோட்டின் செல்லகட்டாவில் இருந்து ஒயிட்பீல்டு வரை ஒரு வழித்தடத்திலும்; துமகூரு சாலையில் உள்ள மாதவாரா முதல் கனகபுரா சாலையில் உள்ள சில்க் இன்ஸ்டிடியூட் இடையிலும், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரண்டு பாதைக்கும் இன்டர்சேஞ்ச் ஆக, மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்களில் பயணம் செய்வோருக்கு, மெட்ரோ ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்தது. மெட்ரோ ரயிலில் தினமும் 8 லட்சம் பேர் முதல் 8.20 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி, மெட்ரோ நிர்வாகம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியது. குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாய் என்றும், அதிகபட்சம் 90 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு பயணியர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனாலும் டிக்கெட் கட்டணத்தை குறைக்க, மெட்ரோ நிர்வாகம் முன்வரவில்லை. இதையடுத்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. தற்போது தினசரி பயணியர் எண்ணிக்கை, எட்டு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சமாக குறைந்து உள்ளது.
கடந்த மாதம் 10, 24 ஆகிய தேதிகளில் மட்டும் எட்டு லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மற்ற நாட்களில் ஏழு லட்சம், ஆறு லட்சம் என குறைந்து வந்தது. 26ம் தேதி 5.20 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
கட்டணத்தை குறைக்காவிட்டால் வரும் நாட்களில், பயணியர் எண்ணிக்கை மேலும் குறையும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.