ஆர்.எஸ்.எஸ்., பற்றி அவதுாறு கருத்து: அமைச்சர் பிரியங்கிடம் விசாரிக்க தடை
ஆர்.எஸ்.எஸ்., பற்றி அவதுாறு கருத்து: அமைச்சர் பிரியங்கிடம் விசாரிக்க தடை
UPDATED : அக் 08, 2026 12:00 AM
ADDED : அக் 07, 2026 08:54 PM
பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., பற்றி அவதுாறு கருத்து கூறிய வழக்கில், அமைச்சர் பிரியங்க் கார்கே மீதான நீதிமன்ற விசாரணைக்கு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே. இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பதிவு செய்யப்படாத இயக்கம் என்று, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்ததுடன், அதன் நிதி ஆதாரங்கள், நன்கொடைகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதுபோல, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் முகமது நலபட்டும், ஆர்.எஸ்.எஸ்., குறித்து தனியார் நிகழ்ச்சியில் அவதுாறாக பேசியிருந்தார்.
இவர்கள் இருவர் மீதும், ஹிந்து ஆர்வலர் தேஜஸ் என்பவர், பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிமன்றம், பிரியங்க் கார்கே, முகமது நலபட்டிற்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பியது. இருவரும் விசாரணைக்கு ஆஜராகி, ஜாமினும் பெற்றனர்.
இந்நிலையில், அவதுாறு வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் பிரியங்க் கார்கே, முகமது நலபட் கடந்த மாதம் மனு செய்தனர்.
விசாரணை நடத்திய நீதிமன்றம், 'வழக்கை நாங்கள் நேரடியாக ரத்து செய்ய முடியாது. மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய சமமான அதிகாரம் கொண்ட செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகுங்கள்' என்று அறிவுரை கூறியது.
இதன் அடிப்படையில் இருவரும், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு செய்தனர். தங்கள் மீது புகார் அளித்த தேஜஸ், ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர் என்பதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்று மனுவில் கூறியிருந்தனர்.
இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சிவபிரசாத், பிரியங்க் கார்கே, முகமது நலபட்டிடம், வரும் 30ம் தேதி வரை, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தார்.
புகார்தாரர் தேஜஸ்க்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
