/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.டி.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்
/
பி.டி.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்
பி.டி.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்
பி.டி.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு அமைச்சர் பிரியங்க் கார்கே தகவல்
ADDED : மார் 14, 2025 11:30 PM

பெங்களூரு: ''பி.டி.ஓ., எனும் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்த பின், அரசு முடிவு செய்யும்,'' என கிராம மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் சிதானந்த கவுடாவின் கேள்விக்கு பதில் அளித்து, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
பி.டி.ஓ.,க்களுக்கு 10 முதல் 11 ஆண்டுகள் வரை, பதவி உயர்வு வழங்க முடியவில்லை. இவர்களின் பதவி உயர்வு தொடர்பான வழக்கு, நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. வழக்கு முடிவுக்கு வந்ததும், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.
சில இடங்களில், இரண்டு முதல் மூன்று பஞ்சாயத்துகளை, ஒரு பி.டி.ஓ.,க்கள் நிர்வகிக்கின்றனர். இதனால் சரியாக பணியாற்ற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களுக்கு பதவி உயர்வு வழங்க, அரசுக்கு ஆர்வம் உள்ளது.
கர்நாடக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம், 247 பி.டி.ஓ.,க்கள் நியமனம் தொடர்பாக பட்டியல் வெளியிடும்படி கடிதம் எழுதப்பட்டது. பட்டியல் வெளியான பின், பஞ்சாயத்துகளுக்கு 247 பி.டி.ஓ.,க்கள் கிடைப்பர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் பணியாற்ற முடியும்.
ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்கா தாலுகாவில், வேலை உறுதி திட்டத்தில், நாட்டிலேயே மிகப்பெரிய அளவில், 350 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, 37 பி.டி.ஓ.,க்கள் உட்பட, பல அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுபோன்று நடக்காமல், நடவடிக்கை எடுப்போம்.
வேலை உறுதி திட்டத்தில், பத்து முதல் 12 ஆண்டுகளாக ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும் நாட்களில் விரிவான தகவல்கள் தெரிவிக்கப்படும்.
நரேகா மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில், 344 உதவி இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை கட்டம், கட்டமாக நிரப்புவோம். யாருக்கும் பணி நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.