/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துணை முதல்வர் சிவகுமாருடன் மோகன்தாஸ் பை சந்திப்பு
/
துணை முதல்வர் சிவகுமாருடன் மோகன்தாஸ் பை சந்திப்பு
ADDED : மார் 02, 2025 06:15 AM

பெங்களூரு: மாநில அரசை குறை கூறிய மணிப்பால் குளோபல் கல்வி சேவை தலைவர் மோகன் தாஸ் பை, நேற்று துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
'பெங்களூரு மக்களின் நிலை, பரிதாபகரமாக உள்ளது. இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு என்ன செய்தது?' என மணிப்பால் குளோபல் கல்வி சேவை தலைவர் மோகன் தாஸ் பை, கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு ஐ.டி., - பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, '135 இடங்கள் காங்கிரஸ் பெற்றது, உங்களுக்கு எவ்வளவு மனவேதனை அளிக்கிறது என்பது எங்களுக்கு தெரியும்.
கர்நாடகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அநீதி இழைத்தபோது, ஏன் மவுனமாக இருந்தீர்கள்?' என்று கேள்வி கேட்டிருந்தார்.
இந்நிலையில், பெங்களூரில் துணை முதல்வர் சிவகுமாரை, நேற்று மோகன் தாஸ் பை சந்தித்துப் பேசினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
துணை முதல்வர் சிவகுமாரிடம், பெங்களூரு குறித்து விவாதித்தோம். அவர், பெங்களூரின் ஹீரோவாக வருவார். நாட்டிலேயே பணக்கார நகரமாக பெங்களூரு உள்ளது.
பெங்களூருக்கு சிறந்த உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. சுத்தம், சிறந்த நடைபாதை, போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.
ஆறு மாதம் அவகாசம் கொடுங்கள். பெங்களூரு உள்கட்டமைப்பை மாற்றிக் காட்டுவதாக சிவகுமார் கூறியுள்ளார்.
மாநிலத்தின் குடிமகனாக, அரசை விமர்சித்தேன். இதை நல்லவிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேவகவுடா, கிருஷ்ணா, குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோரின் அரசை விமர்சித்தேன். அப்போது என்னை அழைத்து, பெங்களூரு மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர்.
நாட்டிலேயே, கர்நாடகாவில் மட்டும் தான் மாநில அரசை காலையில் விமர்சித்தால், மாலையில் அழைத்து ஆலோசனை கேட்பர். கர்நாடகாவில் உள்ள அரசியல்வாதிகள் சிறந்தவர்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம், நான் விமர்சனம் செய்வதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.