/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சொத்து வரி பாக்கி விதான் சவுதாவுக்கு நோட்டீஸ்
/
சொத்து வரி பாக்கி விதான் சவுதாவுக்கு நோட்டீஸ்
ADDED : மார் 04, 2025 04:48 AM
பெங்களூரு: சொத்து வரி பாக்கி வைத்துள்ளதாக பெங்களூரு விதான் சவுதா உட்பட 258 அரசு அலுவலகங்களுக்கு, பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பெங்களூரில் வீடு, கட்டடம் வைத்திருப்பவர்களிடம் இருந்து, மாநகராட்சி சொத்து வரி வசூலிக்கிறது. ஆனால் பலர் சொத்து வரி செலுத்தாமல், டிமிக்கி கொடுக்கின்றனர். இதனால் அபராத தொகையும் எகிறியது. இதுபற்றி யாரும் கவலைப்படவில்லை.
அபராத தொகையுடன் சேர்த்து சொத்து வரியை 50 சதவீத தள்ளுபடியில் செலுத்தும் திட்டத்தையும், மாநகராட்சி கொண்டு வந்தது. இந்த திட்டத்தை பயன்படுத்தி பெரும்பாலானோர் சொத்து வரி செலுத்தினர். இதிலும் சிலர் அலட்சியம் காண்பித்தனர்.
இந்நிலையில் பெங்களூரு விதான் சவுதா, விகாஸ் சவுதா, மற்ற இடங்களில் செயல்படுபவை என, 258 அரசு அலுவலகங்கள், பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மாநகராட்சி வரி நிலுவை தொகை அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனாலும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது.
இதையடுத்து விதான் சவுதா உட்பட 258 அரசு அலுவலகங்களுக்கு, சொத்து வரி செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சொத்து வரி செலுத்தாவிட்டால் தனியார்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி அதிகாரிகள், அரசு அலுவலகங்கள் செலுத்தாத வரி குறித்து ஏன் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்றும், விமர்சனம் எழுந்துள்ளது.