பிரதமர் பாராட்டிய பெண்ணுக்கு ஜி.பி.ஏ., அதிகாரிகள் நெருக்கடி
பிரதமர் பாராட்டிய பெண்ணுக்கு ஜி.பி.ஏ., அதிகாரிகள் நெருக்கடி
ADDED : செப் 05, 2026 11:12 PM

பெங்களூரு: தள்ளுவண்டி ஹோட்டல் நடத்தி வந்த பெண்ணை, பிரதமர் பாராட்டிய ஒரு வாரத்திற்குள், இடமாற்றம் செய்ய சொல்லி ஜி.பி.ஏ., அதிகாரிகள், அப்பெண்ணை வற்புறுத்தி வருகின்றனர்.
ஹாசனை சேர்ந்தவர் நிங்கம்மா. திருமணத்துக்கு பின் பெங்களூரில் குடியேறினார். குடும்பத்திற்காக, கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மாகடி சாலையில் உள்ள ஹொசஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகில் தள்ளுவண்டியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் நவ., 30ம் தேதி பிரதமரின் 'மனதின் குரல்' மூலம் பேசிய மோடி, மத்திய அரசின் சுய தொழில் திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக ஹோட்டல் தொழிலை நடத்தி வருவதாக பாராட்டி பேசியிருந்தார். இதையடுத்து பலரும் அவரை பாராட்டி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை நிங்கம்மாவை தொடர்பு கொண்ட ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகள், நடைபாதையில் ஹோட்டல் நடத்த கூடாது. பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளது. ஹோட்டல் நடத்த கட்டடம் கட்டி தொழில் நடத்தும்படி வற்புறுத்தி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிங்கம்மா கூறியதாவது:
பிரதமர் பாராட்டிய போது, ஜி.பி.ஏ., அதிகாரிகளும் என்னை பாராட்டி, இங்கேயே தொழிலை தொடரும்படி கூறினர். திடீரென, இன்று நடைபாதையில் ஹோட்டல் நடத்த கூடாது. புதிதாக கட்டடம் கட்டி ஹோட்டல் நடத்தும்படி கூறுகின்றனர்.
கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளேன். இப்போது கட்டடம் கட்டி, ஹோட்டல் நடத்த சொன்னால் எப்படி முடியும்... ஹோட்டல் நடத்த வேறு இடம் பார்த்து தருவாக கூறுகின்றனர்.
என் குடும்பத்தை காப்பாற்றவே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளேன். யாரையோ காப்பாற்றுவதற்காக என்னை பலிகடா ஆக்குகின்றனர். நான் இங்கு ஹோட்டல் நடத்துவதால், மற்ற ஹோட்டல் கடையினர் பாதிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனக்கு தெரிந்த தொழிலை விட்டு, வேறு தொழில் செய்ய கஷ்டம்.
நாங்கள் விதிமுறைகளை மீறவில்லை. என் நடந்தாலும் ஹோட்டலை மூடமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
