அவல நிலையில் உறைவிட பள்ளி: அலட்சியத்தில் அதிகாரிகள்
அவல நிலையில் உறைவிட பள்ளி: அலட்சியத்தில் அதிகாரிகள்
ADDED : செப் 05, 2026 11:12 PM
ஹாசன்: மாட்டு கொட்டகை போன்ற ஷெட்டில், உறைவிட பள்ளி நடத்துவது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. இங்கு குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும் இல்லை.
ஹாசனின், சாந்தி கிராமத்தில் அம்பேத்கர் உறைவிட பள்ளி செயல்படுகிறது. கடந்த 2017ல் வாடகை கட்டடத்தில், அந்த உறைவிட பள்ளி திறக்கப்பட்டது. இது, சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், 2021ல் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. மாட்டு கொட்டகையை விட, மோசமான ஷெட்டில் உறைவிட பள்ளி நடத்துகின்றனர்.
ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான பள்ளியில், 92 சிறுவர்கள், 80 சிறுமியர் கல்வி கற்கின்றனர். ஒரு ஷெட்டில், மாணவர்களும், இன்னொரு ஷெட்டில் மாணவியரும் உள்ளனர்.
உறைவிட பள்ளிகளின் நிர்வகிப்பு மற்றும் மாணவர்களின் கல்விக்காக நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிடுவதாக, அரசு கூறுகிறது. ஆனால் ஹாசனின், சாந்தி கிராமத்தில் உள்ள அம்பேத்கர் உறைவிட பள்ளியில், குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும் இல்லை. சரியான கழிப்பறை, குடிநீர் வசதியும் இல்லாமல், மாணவ, மாணவியர் பரிதவிக்கின்றனர்.
ஒரே இடத்தில் காலை, மதியம், இரவு உணவருந்துகின்றனர். அதன்பின் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு, அதே இடத்தில் வகுப்பு நடத்தப்படுகிறது.
இரவு அதே இடத்தில், மெத்தை விரித்து உறங்க வேண்டும். ஒரு மெத்தையில் இருவர் உறங்க வேண்டும். சிறிய ஹாலுக்குள் தங்களின் பெட்டி உட்பட, மற்ற பொருட்களை வைத்து கொள்கின்றனர். கழிப்பறை அருகிலேயே, சமையல் அறை உள்ளது.
காற்று, வெளிச்சம் இல்லாத இருட்டறையில் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். பள்ளியின் சூழ்நிலை குறித்து விவரித்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உறைவிட பள்ளி முதல்வரும், வார்டனும் பல முறை கடிதம் எழுதியும், அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை.
