தங்க புதையல் கண்டுபிடிப்பு: ஒப்படைத்த தொழிலாளர்கள்
தங்க புதையல் கண்டுபிடிப்பு: ஒப்படைத்த தொழிலாளர்கள்
ADDED : செப் 05, 2026 11:11 PM

பெலகாவி: பெலகாவி மாவட்டம், சவதத்தி தாலுகாவின், இஞ்சலா கிராமத்தில், பி.சி.எம்., ஹாஸ்டல் அருகில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பணிகள் நடக்கின்றன.
நேற்று முன்தினம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். பள்ளம் தோண்டும் போது, சிறிய குடம் தென்பட்டது. இதில், 14 தங்க நாணயங்கள் இருந்தன.
இவற்றை கூலி தொழிலாளர்கள், அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி, தாலுகா பஞ்சாயத்து ஊழியர்கள் முன்னிலையில், சவதத்தி தாசில்தார் மல்லிகார்ஜுன ஹெக்கனவரிடம், தங்க நாணையங்கள் ஒப்படைத்தனர். அவரும் தாலுகா கருவூலத்தில் சேர்த்தார்.
நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க நாணயங்கள் மீது, யானையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தலக்காட்டை ஆட்சி செய்த கங்கர்களின் ராஜ முத்திரையாக இருந்தது யானை. எனவே, அந்த நாணயங்கள், கங்கர்கள் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என, வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நாணயங்களை மதிப்பிட்டதில், 54.8 கிராம் இருந்தது. இதன் மதிப்பு, 8.27 லட்சம் ரூபாயாகும். தங்க நாணயங்களை நேர்மையுடன் ஒப்படைத்த கூலி தொழிலாளர்களை, அதிகாரிகள் பாராட்டினர்.
