ADDED : செப் 05, 2026 11:11 PM
பெங்களூரு: பெங்களூரின், 'பேயிங் கெஸ்ட்' மையங்கள் எனும் பி.ஜி.,க்களில், உணவுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இங்குள்ள சமையல் அறைகளில் துாய்மை இல்லாததால் அங்கிருந்த ஊழியர்களை கண்டித்தனர்.
பெங்களூரில் செயல்படும் பேயிங் கெஸ்ட் மையங்களில், உணவு தரமாக இல்லை. துாய்மையும் இல்லை என, உணவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு ரூரல் மாவட்டங்களின், பல்வேறு இடங்களில் உள்ள பி.ஜி.,க்களில், நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 64 பி.ஜி.,க்களில் சோதனை நடந்தது.
பல பி.ஜி.,க்களின் சமையல் அறை, துாய்மையாக இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. உணவு தயாரிக்க அழுகிய காய்கறிகள், காலாவதியான அரிசி மாவு, புட் கலர், கலப்படம் செய்யப்பட்ட மிளகு உட்பட, பல உணவு பொருட்கள் பயன்படுத்துவது தெரிந்தது.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 23 பி.ஜி.,க்களில் இருந்து, 12 உணவு மாதிரிகளை சேகரித்தனர். இவற்றை ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளனர்.
பொம்மசந்திராவில் உள்ள, 'நந்தனா எலைட்' பி.ஜி.,யில் சிறிதும் துாய்மை இல்லை. உணவும் தரமாக இல்லை. உணவு மேஜை மீதே குப்பை மட்டுமின்றி, மூட்டைப்பூச்சிக்கொல்லி மருந்தும் இருந்தது. அதை பார்த்து, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த அறைக்கு பூட்டு போடும்படி உத்தரவிட்டனர்.
விதிமுறைகளை மீறிய, பி.ஜி.,க்களுக்கு, 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டது.
