ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார் திடீர் மாயம்: தந்தையை பார்க்க சென்றதாக அமைச்சர் தகவல்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார் திடீர் மாயம்: தந்தையை பார்க்க சென்றதாக அமைச்சர் தகவல்
ADDED : ஆக 22, 2026 11:25 PM

பெங்களூரு: கே.பி.எஸ்.சி.,யில் நடந்த முறைகேடு குறித்து, விசாரணை நடந்து வரும் நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார், வெளியூர் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம், கால்நடை டாக்டர்கள் நியமனத்துக்காக நடத்திய தேர்வில், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்பட்டது. இது குறித்து, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இம்மாதம் 19ம் தேதியன்று, 21 இடங்களில் சோதனை நடத்தினர்.
தீவிர விசாரணை கே.பி.எஸ்.சி., முறைகேடு குறித்து, தீவிரமாக விசாரணை நடக்கும் நிலையில், இதற்கு முன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார், காணாமல் போயுள்ளார்.
கடந்த, 2016 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஞானேந்திரகுமார், உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். கர்நாடகாவில் பொதுப்பணித்துறை இணை நிர்வாக இயக்குநர், கே.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட பல்வேறு பதவிகளை நிர்வகித்தவர். தற்போது சிறிய, நடுத்தர தொழில் துறை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஆகஸ்ட் 20ம் தேதியன்று, அவசர, அவசரமாக டில்லி புறப்பட்டார். விமானம் புறப்படும் ஒன்றரை மணி நேரத்துக்கு முன், 30,253 ரூபாய் கொடுத்து, இண்டிகோ விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார்.
டில்லி செல்ல கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பின், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் - ஆப் அகியுள்ளது.
அவர் டில்லிக்கு சென்றாரா அல்லது வேறு எங்காவது சென்றாரா என்பது தெரியவில்லை. அவரை தொடர்பு கொள்ள குடும்பத்தினரும், நண்பர்களும் முயற்சித்தும் பலன் இல்லை.
தேட உத்தரவு இதுகுறித்து மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் தகவல் கூறி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமாரை தேடும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். கமிஷனரும் சிறப்பு குழு அமைத்து, தேடும்படி உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு குழுவினரும் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கின்றனர். கடைசியாக அந்த அதிகாரி எங்கெங்கு சென்றார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, நேற்று அளித்த பேட்டி:
ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார், காணாமல் போகவில்லை. அவரது தந்தைக்கு இதய பிரச்னை இருப்பது தெரிந்து, அவசரமாக உத்தர பிரதேசத்துக்கு சென்றுள்ளார்.
இந்த விஷயத்தை, மின்னஞ்சல் வழியாக உயர் அதிகாரிக்கு தகவல் அனுப்பியுள்ளார். நேற்று பண்டிகை இருந்ததால், மின்னஞ்சலை யாரும் பார்க்கவில்லை.
அதிகாரி இன்னும் இரண்டு நாட்களில், பெங்களூரு திரும்புவார். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என, எந்த விசாரணைக்கும் பயந்து தப்பியோடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
