/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரிய வகை நோய்களுக்கு சிகிச்சை செலவு பணம் இல்லாமல் நோயாளிகள் அவதி
/
அரிய வகை நோய்களுக்கு சிகிச்சை செலவு பணம் இல்லாமல் நோயாளிகள் அவதி
அரிய வகை நோய்களுக்கு சிகிச்சை செலவு பணம் இல்லாமல் நோயாளிகள் அவதி
அரிய வகை நோய்களுக்கு சிகிச்சை செலவு பணம் இல்லாமல் நோயாளிகள் அவதி
ADDED : பிப் 28, 2025 10:57 PM
பெங்களூரு: நாட்டில் 7,000 அரிய வகை நோய்கள் இருப்பதாக, அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து சதவீதம் நோய்களுக்கு மட்டுமே, துல்லியமான மருத்துவ சிகிச்சை உள்ளது. 95 சதவீதம் நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டும்.
திருத்தம்
இத்தகைய நோய்களால் அவதிப்படுவோருக்கு உதவும் நோக்கில், மத்திய சுகாதார அமைச்சகம், 'அரிய வகை நோய்கள் தொடர்பான தேசிய கொள்கை - 2021க்கு திருத்தம் கொண்டு வந்து, தலா 50 லட்சம் ரூபாய் வரை, இலவச சிகிச்சை வழங்குகிறது.
ஆனால் பெரும்பாலான நோய்களின் சிகிச்சை செலவு, நிர்ணயித்த தொகையை விட அதிகரிக்கிறது. இதனால் நோயாளிகளின் குடும்பத்தினர், சிகிச்சைக்கு செலவிட முடியாமல் திணறுகின்றனர்.
என்ன நோய் என்பதை கண்டு பிடிப்பதில் தாமதமாவது, சிகிச்சை பிரச்னை, விழிப்புணர்வு பற்றாக்குறையால், அரிய வகை நோயாளிகளை கண்டறிவது கஷ்டமாக உள்ளது.
சுகாதார அமைச்சகத்தில், இத்தகைய நோய்களின் சிகிச்சைக்காக 15,000 பேர் பதிவு செய்துள்ளனர்.
இவர்களின் சிகிச்சைக்கு கோடிக்கணக்கான ரூபாய் தேவைப்படுவதால், நோயாளிகளின் விபரங்கள், சிகிச்சை குறித்து இணைய தளத்தில் வெளியிட்டு, நன்கொடையாளர்கள் நிதி வழங்க வசதி செய்துள்ளது.
பெங்களூரில் இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை கட்டுப்பாட்டில் செயல்படும், 'சென்டர் பார் ஹியுமன் ஜெனடிக்ஸ் மைய'த்தில், 308 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் பலரின் சிகிச்சை செலவு, சுகாதாரத்துறை நிர்ணயித்த தொகையை விட மீறியுள்ளது. பணம் இல்லாமல் சிகிச்சையை நிறுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சென்டர் பார் ஹியுமன் ஜெனடிக்ஸ் மையத்தின் டாக்டர் மீனாட்சி பட் கூறியதாவது:
தலசீமியா, ஹீமோபிலியா, போம்பி, கவுச்சர், அரிவாள் செல் ரத்த சோகை உட்பட பல்வேறு நோய்கள், அரிய வகை நோய்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவைகள் வம்சா வழியாக வருகின்றன. மாநிலத்தில் இந்நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, சரியான புள்ளி விபரங்கள் இல்லை.
சென்டர் பார் ஹியுமன் ஜெனடிக்ஸ் மைய கணிப்பு படி, 12 லட்சம் நோயாளிகள் உள்ளனர். 40,000 பேர் மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அரிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர சிகிச்சை மற்றும் மருந்துகள் அவசியம். மத்திய அமைச்சகம் நிர்ணயித்துள்ள 50 லட்சம் ரூபாயில், ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை மட்டுமே சிகிச்சை பெற முடியும்.
இலவச சிகிச்சை
தற்போது இம்மையத்தில், 300 க்கும் மேற்பட்டோர், இலவச சிகிச்சை பெறுகின்றனர். நன்கொடையாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவி பெற்று, சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நோயின் தீவிரம் மற்றும் எடை அடிப்படையில், சிகிச்சை செலவு முடிவாகிறது.
பத்து கிலோ உள்ள குழந்தைக்கு சிகிச்சை அளிக்க, ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் தேவைப்படும். சிலருக்கு ஒரு கோடி ரூபாய் முதல் ஐந்து கோடி ரூபாய் வரை செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.