தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மங்களூரில் பார்க்க வேண்டிய இடங்கள்

மங்களூரில் பார்க்க வேண்டிய இடங்கள்

மங்களூரில் பார்க்க வேண்டிய இடங்கள்


ADDED : ஏப் 29, 2026 10:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 10:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் தலைநகர் மங்களூரு பிரபல சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு, இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் அதிகளவில் வருகை தருகின்றனர். வடக்கு கேரளத்தில் உள்ள முக்கிய மாவட்டமான காசர்கோடு, மங்களூரில் இருந்து 51 கி.மீ., துாரத்தில் உள்ளது.

இதனால் கேரளாவின் கலாசாரமும் கொஞ்சம் மங்களூரில் உள்ளது. சுற்றுலாவுக்கு மட்டுமின்றி ஆன்மிக தலங்களுக்கும் ஏற்ற இடமாக மங்களூரு உள்ளது. பல சிறப்புகளை கொண்ட மங்களூரில், முக்கிய சுற்றுலா தலங்கள் பற்றி பார்ப்போம்.

பனம்பூர் கடற்கரை மங்களூருக்கு சுற்றுலா வரும் பயணியரின், முதல் தேர்வாக இருப்பது பனம்பூர் கடற்கரை. அரபிக்கடல் பகுதியில் உள்ள இந்த கடற்கரை, ‘பனம்பூர் கடற்கரை சுற்றுலா மேம்பாட்டு திட்டம்’ என்ற பெயரில், தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறது.

கடலுக்குள் ஜெட் சவாரி செய்வது; டால்பின்களை மிக அருகில் காண்பது, கடற்கரை திருவிழா என, பனம்பூர் கடற்கரை தனக்கென தனி இடம் பிடித்து உள்ளது.

சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்கவும் ஏற்ற இடமாக உள்ளது. துறைமுகத்துக்கு செல்வதற்காக நடுக்கடலில் நங்கூரமிட்டு காத்து நிற்கும் கப்பல்களை, கடற்கரையில் இருந்து கண்டு ரசிக்கலாம்.

இது தவிர படகு சவாரி, தேர், ஒட்டகம், குதிரை சவாரி என, சுற்றுலா பயணியரை மகிழ்விக்க பல விஷயங்கள் உள்ளன.

கடற்கரை திருவிழா நடக்கும் போது, பட்டம் விடுவது, மணல் சிற்ப போட்டிகளும் நடக்கின்றன. பல நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.

சுல்தான் பத்தேரி மங்களூரு நகரில் இருந்து 4 கி.மீ., துாரத்தில், போலுார் என்ற இடத்தில் அமைந்து உள்ளது சுல்தான் பத்தேரி. திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

சுல்தான் பத்தேரி, சுல்தானின் பீரங்கி தளம் என இந்த இடம், உள்ளூர் மக்களால் அடையாளம் காணப்படுகிறது.

கருங்கற்களால் கட்டப்பட்டு இருப்பதால், கோட்டை இன்னும் பழமை மாறாமல் பிரமிப்பாக உள்ளது. கோபுரத்திற்குள் ரகசிய அறை உள்ளது.

திப்பு சுல்தான் ஆட்சியில், வெடி மருந்துகளை ரகசிய அறையில் பதுக்கி வைத்து, போரின் போது பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

கோபுரத்தின் அடிப்பகுதியில் உள்ள பாதாள அறையை பயன்படுத்தி, மைசூரு சென்று விடலாம் என்று சொல்கின்றனர்.

பாதுகாக்கப்பட்ட இடமாக இந்த கோபுரம் இருப்பதால் முக்கிய அறைகள் அடைக்கப்பட்டு உள்ளன. கோபுரத்தின் மேல் பகுதிக்கு சென்று, குருபுரா ஆற்றின் அழகை ரசிக்க அனுமதி உள்ளது. அந்த வழியாக செல்லும் மீன்பிடி படகுகளையும் பார்க்கலாம்.

சர்ச் மங்களூரு நகரின் மைய பகுதியில் அமைந்து உள்ளது. இது கத்தோலிக்க சர்ச் ஆகும். கடந்த 1880ல் கட்டப்பட்டது. 1899ல் இத்தாலிய ஜேசுட் அன்டோனியா மோசேனியால், தேவாலயம் முழுதும் வர்ணம் தீட்டப்பட் டது.

ஆளிவிதை எண்ணெயுடன் கலந்து வர்ணம் தீட்டப்பட்டதால், அதன் கலை இன்னும் பழமை மாறாமல் உள்ளது. இரவில் மின்விளக்கில் ஜொலிக்கிறது.

வர்ண கலையை பார்க்கவே, தேவாலயத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். சர்ச் வளாகத்தில் உள்ள, அருங்காட்சியகத்தில், மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், சிலைகள், வாகனங்கள் உள்ளன. இதுவும் காண்போரை கவர்ந்து இழுக்கிறது.

மேற்கண்டவை தவிர தண் ணீர்பாவி, சோமேஸ்வரா, சூரத்கல், உல்லால் கடற்கரைகள்; கத்ரி மஞ்சுநாதா, குத்ரோலி கோகர்ணநாதா, மங்களாதேவி கோவில்கள் ஆகியவையும், சிறந்த சுற்றுலா தலங்களாக உள்ளன. இரண்டு நாட்கள் மங்களூரில் முகாமிட்டால் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us