/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.50 லட்சம், அரை கிலோ தங்கம் கேட்ட மணமகன் குடும்பம் மீது போலீசில் புகார்
/
ரூ.50 லட்சம், அரை கிலோ தங்கம் கேட்ட மணமகன் குடும்பம் மீது போலீசில் புகார்
ரூ.50 லட்சம், அரை கிலோ தங்கம் கேட்ட மணமகன் குடும்பம் மீது போலீசில் புகார்
ரூ.50 லட்சம், அரை கிலோ தங்கம் கேட்ட மணமகன் குடும்பம் மீது போலீசில் புகார்
ADDED : மார் 07, 2025 08:49 AM

பெங்களூரு: திருமணத்துக்கு முந்தைய நாள், வரதட்சணையாக 50 லட்சம் ரூபாய், அரை கிலோ தங்கம், பென்ஸ் கார் கேட்ட மணமகன் குடும்பத்தினர் மீது, மணமகளின் தந்தை புகார் அளித்து உள்ளார்.
மைசூரை சேர்ந்தவர்கள் பிரேம் சந்த் - பிரீத்தி. இருவரும், சிறு வயதில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் போதே நண்பர்களாக இருந்தனர். பி.இ., - எம்.எஸ்., முடித்த பிரீத்திக்கு பிரான்சின், பாரிசில் வேலை கிடைத்ததால் அங்கு சென்று விட்டார்.
அதுபோன்று பிரேம்சந்தும், படிப்பு முடிந்து பணிக்காக பாரிஸ் சென்றார். இருவரும் நண்பர்கள் என்பதால் அங்கு சந்தித்து பழகினர். அப்போது இருவரும் காதலிக்க துவங்கினர். நீண்ட நாட்கள் காதலித்த இவர்கள், தங்கள் குடும்பத்தினரை சந்தித்து திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள வைத்தனர்.
இதையடுத்து, கடந்தாண்டு ஜூலை இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தாண்டு மார்ச் 3ல் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பெங்களூரு காந்தி நகரில் உள்ள நந்தி கிளப் மண்டபத்தில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிப்., 28ல் மெஹந்தி நிகழ்ச்சியும், மார்ச் 1ல் திருமணம் தொடர்பான நிகழ்ச்சியும் நடந்தன. மார்ச் 2ல், மணமகன் பிரேம் சந்தின் தந்தை சிவகுமார் பவானி, தாயார் ராதா, அவர்களின் உறவினர்கள் மஞ்சு, பாரத் ஆகியோர், வரதட்சணையாக 50 லட்சம் ரூபாய் ரொக்கம், அரை கிலோ தங்கம், பென்ஸ் கார் வேண்டும் என்று கேட்டனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை, அவ்வளவு தொகை தர முடியாது என்று கூறிவிட்டார். இத்தகவல் மண்டபத்தில் உறவினர்கள் மத்தியில் பரவியது. இதையறிந்த மணமகன் குடும்பத்தினர், அன்றிரவு மண்டபத்தில் இருந்து வெளியேறி விட்டனர். மறுநாள் நடக்கவிருந்த திருமணம் நின்று போனது.
இது தொடர்பாக உப்பார்பேட்டை போலீசில், பிரீத்தியின் தந்தை புகார் அளித்துள்ளார். மேலும், திருமணத்துக்கு முன்னரே, தன் மகளை பலவந்தமாக பிரேம் சந்த் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.