/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தலைநிமிர்ந்து முன்னேறி செல்லும் சகோதரிகள் மகளிர் தின மாநாட்டில் ஜனாதிபதி பெருமிதம்
/
தலைநிமிர்ந்து முன்னேறி செல்லும் சகோதரிகள் மகளிர் தின மாநாட்டில் ஜனாதிபதி பெருமிதம்
தலைநிமிர்ந்து முன்னேறி செல்லும் சகோதரிகள் மகளிர் தின மாநாட்டில் ஜனாதிபதி பெருமிதம்
தலைநிமிர்ந்து முன்னேறி செல்லும் சகோதரிகள் மகளிர் தின மாநாட்டில் ஜனாதிபதி பெருமிதம்
ADDED : பிப் 15, 2025 02:50 AM

பெங்களூரு: ''அறிவியல், விளையாட்டு, அரசியல், கலை, கலாசாரம் என எதுவாக இருந்தாலும், நமது சகோதரிகளும், மகள்களும் தலை நிமிர்ந்து முன்னேறி செல்கின்றனர். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், வளர்ந்த இந்தியாவை நோக்கிய ஒரு படியாக இருக்கும்,'' என ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
பெங்களூரில் உள்ள, 'வாழும் கலை' நிறுவனத்தின் சர்வதேச மையம் சார்பில், 10வது சர்வதேச பெண்கள் தின மூன்று நாள் மாநாடு நேற்று துவங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கவர்னர் தாவர்சந்த் கெலாட், வாழும்கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி, மத்திய இணை அமைச்சர் ஷோபா பங்கேற்றனர்.
மனித பண்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:
தற்போது, தொழில்நுட்ப யுகத்தில் இருக்கிறோம். தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. போட்டி நிறைந்த உலகில், மனித பண்பு அப்படியே இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் கருணை, அன்பு, ஒற்றுமை போன்ற மனித பண்புகளை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். மனித பண்புகளை மேம்படுத்த, கருணை மூலம் வழிநடத்தும் திறமை பெண்களுக்கு உண்டு. தனி நபரை தாண்டி, குடும்பங்கள், சமூகங்கள், உலகளவில் உறவுகளின் நல்வாழ்வுக்காக உழைக்கும் திறமை அவர்களிடம் உள்ளது.
கல்வி முக்கியம்
நாட்டின் வளர்ச்சிக்கு பல வழிகளில் பங்களித்த பெண்கள், இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள முடியும். ஆன்மிக கொள்கைகளால், தங்களை சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையை அழகாகவும், அமைதியாகவும் மாற்றுவர்.
அறிவியல், விளையாட்டு, அரசியல், கலை அல்லது கலாசாரம் என எதுவாக இருந்தாலும், நமது சகோதரிகளும், மகள்களும் தலை நிமிர்ந்து முன்னேறி செல்கின்றனர். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், வளர்ந்த இந்தியாவை நோக்கிய ஒரு படியாக இருக்கும்.
கல்வியில் வாழும் கலை நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியது. இம்முயற்சிகள் நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, நாட்டின் தொலைதுார பழங்குடியின பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் பயனளிக்கிறது.
பெரும்பாலான குழந்தைகள் முதல் தலைமுறையாக கல்வி கற்றவர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நம் குழந்தைகளுக்கு கல்வியை விட, மனித குலத்துக்கு பெரிய முதலீடு எதுவும் இல்லை. வறுமை, சமத்துவமின்மையை உடைக்கும் சக்தி கல்விக்கு உண்டு.
என் கிராமத்தில் இருந்து உயர்கல்வி, கல்லுாரிக்கு சென்ற முதல் பெண் நான் தான். சரியான வழிகாட்டுதல், ஆதரவு கிடைத்தால் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவர்.
அடுத்த தலைமுறையினருக்கு கல்வி மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில், நீங்கள் அனைவரும் குறிப்பிடத்தக்க பங்கை பெற்றுள்ளீர்கள். உங்கள் நாட்டிற்கான கனவு, உலகத்திற்கான கனவு, பிரகாசமான எதிர்காலம், நோக்கமுள்ள வாழ்க்கைக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பேசினார்.

