/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பெற்றோரை பராமரிக்காவிட்டால் சொத்து உரிமை ரத்து'
/
'பெற்றோரை பராமரிக்காவிட்டால் சொத்து உரிமை ரத்து'
ADDED : மார் 13, 2025 12:18 AM
பெங்களூரு: “தாய், தந்தை மற்றும் மூத்தவர்களை பராமரிக்காவிட்டால், தன் பிள்ளைகளுக்கு அல்லது உறவினர்களுகு அளித்த சொத்து உரிமையை ரத்து செய்யும் வாய்ப்பை, மத்திய அரசின் சட்டம் அளித்துள்ளது,” என, மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் பல்கிஸ் பானு கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கூறியதாவது:
சமீப நாட்களாக பிள்ளைகள், தங்களின் பெற்றோரை கவனிக்காமல் புறக்கணிப்பது அதிகரிக்கிறது. ஒருவேளை பிள்ளைகள் அல்லது உறவினர்கள் முதியோரை கவனிக்காவிட்டால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த உயிலை ரத்து செய்யும் அதிகாரம், மூத்த குடிமக்களுக்கு உள்ளது.
மத்திய அரசு 2007ம் ஆண்டிலேயே, 'பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல சட்டம்' அமல்படுத்தியது. ஆனால் இதை பற்றி பலருக்கும் தகவல் தெரிவது இல்லை. இந்த தகவல் அனைவருக்கும் தெரிய வேண்டும். எனவே சட்டத்தை பற்றி மேல்சபையில் குறிப்பிடுகிறேன்.
சட்டப்படி பிள்ளைகளோ அல்லது உறவினர்களோ, மூத்த குடிமக்களை பராமரிக்க வேண்டும். மருந்துகள் உட்பட, மற்ற செலவுகளுக்கு மாதந்தோறும் பணம் கொடுக்க வேண்டும்.
பணம் கொடுக்காவிட்டாலோ, பராமரிப்பில் அலட்சியம் காட்டினாலோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மூத்த குடிமக்கள் புகார் அளிக்கலாம். இவர்களின் குற்றச்சாட்டு உறுதியானால், பெற்றோரிடம் சொத்துகளை பெற்றுக் கொண்டு, அவர்களை அலட்சியப்படுத்தினால் சொத்து உரிமையை ரத்து செய்யலாம். அந்த சொத்துகளை மீண்டும் அவர்களின் பெயருக்கு மாற்ற, சட்டத்தில் இடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.