/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகை ரன்யா ராவிடம் சிக்கிய ரொக்கம், நகைகள் ரூ.17 கோடி! : தொடையில் தங்க கட்டிகளை ஒட்டி கடத்தியது அம்பலம்
/
நடிகை ரன்யா ராவிடம் சிக்கிய ரொக்கம், நகைகள் ரூ.17 கோடி! : தொடையில் தங்க கட்டிகளை ஒட்டி கடத்தியது அம்பலம்
நடிகை ரன்யா ராவிடம் சிக்கிய ரொக்கம், நகைகள் ரூ.17 கோடி! : தொடையில் தங்க கட்டிகளை ஒட்டி கடத்தியது அம்பலம்
நடிகை ரன்யா ராவிடம் சிக்கிய ரொக்கம், நகைகள் ரூ.17 கோடி! : தொடையில் தங்க கட்டிகளை ஒட்டி கடத்தியது அம்பலம்
ADDED : மார் 06, 2025 01:00 AM

பெங்களூரு: துபாயில் இருந்து பெங்களூருக்கு, 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 கிலோ தங்கக் கட்டிகள் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் வீட்டில் இருந்து, 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இவர், தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி கடத்தியதும் அம்பலமானது. அவரிடம் இருந்து மொத்தம் 17.29 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரைச் சேர்ந்தவர் ரன்யா ராவ், 34; நடிகை. கன்னடத்தில் இரண்டு, தமிழில் ஒரு படம் நடித்துள்ளார். கர்நாடக போலீஸ் குடியிருப்பு மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி கழக ஏ.டி.ஜி.பி., ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள்.
இவர், கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில், 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான 14.80 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்தார். அவரை, விமான நிலையத்தில், டில்லி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
பின், பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ரன்யா ராவ் தன் கணவருடன் வசித்து வந்த, பெங்களூரு லாவெல்லி சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், நேற்று முன்தினம் இரவே வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முதல் முறை
இதுகுறித்து, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 3ம் தேதி இரவு துபாயில் இருந்து பெங்களூரு வந்த எமிரேட்ஸ் விமானத்தில், பெண் பயணி ஒருவர் கடத்தி வந்த 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான 14.80 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரது வீட்டில் நடத்திய சோதனையில், 2.06 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், 2.67 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கின.
அவரிடம் மொத்தம், 17.29 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, ரொக்கம் சிக்கி உள்ளன. பெங்களூரு விமான நிலையத்தில் இவ்வளவு பெரிய தொகையில் தங்கக் கட்டிகள் சிக்கி இருப்பது இதுவே முதல்முறை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரன்யா ராவிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான், ரன்யா ராவுக்கு ஆடம்பரமாக திருமணம் நடந்துள்ளது. அவரது கணவர் கட்டட வடிவமைப்பாளர்; பிரபல அரசியல்வாதி ஒருவரின் உறவினர்.
திருமணத்திற்கு பின், லாவெல்லி சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இருவரும் குடியேறினர்.
தங்கம் கடத்தலில் ரன்யா ராவுக்கு நேரடி தொடர்பு இல்லை. அவர் குருவி போல செயல்பட்டுள்ளார். அதாவது, நகைகளை கடத்தி வந்து கொடுத்தால், அவருக்கு கமிஷன் கிடைத்துள்ளது.
பெங்களூரில் இருந்து துபாய்க்கு செல்லவும், அங்கு ஹோட்டலில் தங்கவும், அவருக்கு கடத்தல் கும்பல், அறை முன்பதிவு செய்து கொடுத்து விடும். துபாயில் இருந்து எப்போது பெங்களூருக்கு புறப்பட வேண்டும்; தங்கம் எங்கு இருக்கும் என்ற தகவலும் அவருக்கு கூறப்படும்.
ரூ.5 லட்சம் கமிஷன்
துபாய் விமான நிலையத்திற்குள் வந்ததும், சிறிது நேரம் இருக்கையில் அமர்ந்து இருப்பார். விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நேராக கழிப்பறை செல்வார். அங்கு தங்கக் கட்டிகள் இருக்கும். அவற்றை தன் உடலில் மறைத்து கடத்தி வருவார். பெங்களூரு விமான நிலையத்தில் இறங்கிய பின், ஏ.டி.ஜி.பி., மகள் என்று கூறுவார்.
இதனால், அவரை சோதனை செய்யாமல், அதிகாரிகள் வெளியே விட்டுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் அவரை, சில நபர்கள் தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்று, அவரது அடுக்கு மாடி குடியிருப்பில் விட்டு விடுவர்.
கடத்தி வந்த தங்கக் கட்டிகளை இன்னொரு பையில் போட்டு, அங்கு வரும் நபரிடம் கொடுத்து விடுவார். 1 கிலோ தங்கக் கட்டியை கடத்தி வந்து கொடுத்தால், ரன்யா ராவுக்கு 5 லட்சம் ரூபாய் தந்துள்ளனர்.
இப்போது கடத்தி வந்த தங்கக் கட்டிகளை உரியவரிடம் ஒப்படைத்து இருந்தால், அவருக்கு 75 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால், அதற்குள் சிக்கி விட்டார்.
பின்னணியில் யார்?
இம்முறை தங்கக் கட்டிகள் மீது பசை தடவி, தன் தொடையில் ஒட்டி உள்ளார். அதன் மீது பேன்டேஜ் போட்டு வந்ததும் தெரிந்தது. அவர் துபாய் சென்று திரும்பும் போது எல்லாம், ஒரே உடையை அணிந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்த கடத்தலின் பின்னணியில் பெரும் புள்ளிகள் இருக்கலாம் என்பதால், அவர்கள் யார் என தீவிர விசாரணை நடக்கிறது.
கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''இந்த வழக்கை வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரிக்கின்றனர். அவர்கள், எங்களுக்கு எந்த தகவலும் தரவில்லை. விசாரணை முடிந்த பின் தகவல் கிடைக்கும்; அதன்பின், பதில் அளிக்கிறேன்,'' என்றார்.
ரன்யா ராவிடம் இருந்து கோடிக்கணக்கில் நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், அமலாக்கத் துறையும் விசாரிக்க வாய்ப்பு உள்ளது.