/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஸ்மார்ட் மீட்டர் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு
/
ஸ்மார்ட் மீட்டர் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு
ADDED : மார் 05, 2025 11:03 PM
பெங்களூரு: புதிய மின் இணைப்புகளுக்கு, ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதை பெஸ்காம் கட்டாயமாக்கியது. மீட்டருக்கான கட்டணத்தையும் 4 முதல் 8 மடங்கு வரை உயர்த்தியுள்ளது.
மாநிலத்தில் பஸ் கட்டணம், மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பெஸ்காம் எல்லைக்கு உட்பட்ட, எட்டு மாவட்டங்களிலும் புதிய மின் இணைப்புகளுக்கு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை தற்காலிக மற்றும் நிரந்தர மின் இணைப்புகளுக்கும் பொருந்தும்.
ஒருமுனை சாதாரண மீட்டர் கட்டணம், 980 ரூபாயாக இருந்தது. இப்போது இதுவே ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ஜி.எஸ்.டி., உட்பட, 4,998 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. 2,450 ரூபாயாக இருந்த எஸ்பி - 2 மீட்டரின் கட்டணம், தற்போது 8,880 ரூபாயாக அதிகரித்துள்ளது.
எஸ்பி - 3 மீட்டரின் கட்டணம் 3,450 ரூபாயாக இருந்தது. இப்போது இதன் கட்டணம் 28,080 ரூபாயாக அதிகரித்துள்ளது. புதிய கட்டண உயர்வு, ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.
ஸ்மார்ட் மீட்டர் பராமரிப்புக்கான வழிகாட்டுதல்கள் குறித்து பெஸ்காம் வெளியிட்ட அறிக்கை:
ப்ரீபெய்டு மீட்டர் பொருத்திய வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அதிகபட்ச ரீசார்ஜ் செய்வதற்கு வரம்பு ஏதும் இல்லை.
மாதாந்திர மின் கட்டணம், அந்தந்த மாதத்தின் முதல் நாளிலேயே கழித்துக் கொள்ளப்படும். இருப்பு பூஜ்ஜியமாக இருந்தால், மென்பொருள் மூலமாக, வாடிக்கையாளரின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.