/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் நினைவு மருத்துவமனை திறப்பு
/
ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் நினைவு மருத்துவமனை திறப்பு
ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் நினைவு மருத்துவமனை திறப்பு
ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் நினைவு மருத்துவமனை திறப்பு
ADDED : மார் 07, 2025 11:09 PM

பெங்களூரு: ''தேசிய ஒற்றுமை, கட்டாய மதமாற்றம் தடுப்பு, ராமர் கோவில் இயக்கத்தை ஆதரித்தது, ஹிந்துத்துவா, சனாதான தர்மத்துக்கு ஆதரவாக செயல்பட்ட பெஜாவர் மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகளுக்கு, நாடு முழுதும் நற்பெயர் கிடைத்துள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பெங்களூரு மாரத்தஹள்ளியில், 2 ஏக்கரில் 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள 150 படுக்கை வசதிகள் கொண்ட, ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் நினைவு மருத்துவமனையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார்.
பெஜாவர் மடாதிபதி ஸ்ரீவிஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உடன்இருந்தனர்.
ஏழைகளுக்கு இலவசம்
இதில், அமித்ஷாபேசியதாவது:
நவீன முறையில் கட்டப்பட்ட மருத்துவமனையில் ஏழைகள், பின்தங்கிய பிரிவினர் இலவச சிகிச்சை பெற உள்ளனர். இங்கு 60 சதவீதம் படுக்கைகள், ஏழைகளுக்கு என ஒதுக்கப்பட்டு உள்ளன.
ஏழைகள், சமூகத்தால் ஓரம் கட்டப்பட்டோருக்கு சேவை செய்ய, ஸ்ரீகிருஷ்ண சேவா ஆசிரம அறக்கட்டளை பாடுபட்டு வருகிறது. ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகளால் நிறுவப்பட்ட அறக்கட்டளையை, அவரது வாரிசான ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள், முன்னெடுத்து வருகிறார். பெங்களூரில் ஏழைகளுக்கு இதை விட சிறந்த சிகிச்சை மையம் இருக்க முடியாது.
* கலங்கரை விளக்கம்
பெஜாவர் மடம், கர்நாடகா மற்றும் தென் மாநிலங்களில் மட்டும் அல்ல, நாட்டின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது.
தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும், கட்டாய மதமாற்றம் தடுப்பு, ராமர் கோவில் இயக்கத்தைஆதரித்தது, ஹிந்துத்துவா, சனாதான தர்மத்துக்குஆதரவாக செயல்படும் பெஜாவர் மடம், நாடு முழுதும் நற்பெயரை பெற்றுள்ளது.
இன்றைய காலகட்டத்தில், ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் போன்ற ஒரு துறவியை காண்பது மிகவும் அரிது. ஆன்மிகம், சமூகம், மதம், சமுதாயத்துக்காக 8 வயதில் இருந்தே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். நரேந்திர மோடி, 2014ல் பிரதமரான போது, அவரை ஆசிர்வதிக்க டில்லி சென்ற முக்கிய துறவிகளில் ஸ்ரீவிஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகளும் ஒருவர்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 60 கோடி மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தலா 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதி அளித்துள்ளார்.
மதம், சேவை சார்ந்த அமைப்புகள், இந்த சுகாதார முயற்சிகளை தீவிரமாக ஊக்குவிக்காவிட்டால், சுகாதார முயற்சிகள் வெற்றி பெறாது. சுவாமிகள் நினைவாக கட்டப்பட்ட இந்த மருத்துவமனை, சமூகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர்பேசினார்.