/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாலியல் பலாத்கார சம்பவம் எதிரொலி ஹம்பிக்கு குறைந்தது பயணியர் வருகை
/
பாலியல் பலாத்கார சம்பவம் எதிரொலி ஹம்பிக்கு குறைந்தது பயணியர் வருகை
பாலியல் பலாத்கார சம்பவம் எதிரொலி ஹம்பிக்கு குறைந்தது பயணியர் வருகை
பாலியல் பலாத்கார சம்பவம் எதிரொலி ஹம்பிக்கு குறைந்தது பயணியர் வருகை
ADDED : மார் 10, 2025 09:40 PM
பெங்களூரு: கொப்பாலில், இஸ்ரேல் சுற்றுலா பெண் பயணி உள்ளிட்ட இருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, இங்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளது. 'ஹோம் ஸ்டே'க்களில் அறைகளின் முன்பதிவும் ரத்து செய்யப்படுகின்றன.
பெட்ரோலுக்கு ரூ.100
கொப்பால், கங்காவதியின், சானாபுரா கிராமத்தில், துங்கபத்ரா அணையின், இடது பக்க கால்வாய் பகுதியில், கடந்த 6ம் தேதி இரவு 10:30 மணியளவில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இளம்பெண், சொகுசு விடுதி உரிமையாளரான 29 வயது பெண், சுற்றுலா பயணியரான அமெரிக்காவின் டேனியல், மஹாராஷ்டிராவின் பங்கஜ், ஒடிசாவின் பிபாஸ் ஆகியோர், இசை கச்சேரி நடத்தியபடி அமர்ந்திருந்தனர்.
அப்போது பைக்கில் அங்கு வந்த மூன்று நபர்கள், பெட்ரோலுக்கு 100 ரூபாய் கேட்டனர். இதனால் இவர்களுக்கும், பங்கஜ், பிபாஸ், டேனியல் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது.
இதில் மூவரையும் கால்வாயில் தள்ளிவிட்டு, இஸ்ரேல் பெண்ணையும், சொகுசு விடுதி உரிமையாளரையும் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பினர்.
கால்வாயில் தள்ளப்பட்ட மூவரில் இருவர், நீந்தி கரை சேர்ந்தனர். பிபாஸ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
60 சதவீதம்
இதைத் தொடர்ந்து இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஹம்பி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளுக்கு, இஸ்ரேலில் இருந்து 60 சதவீதம் சுற்றுலா பயணியர் வந்தனர்.
ஆனால், இந்த சம்பவத்துக்கு பின், இங்கு வரவே தயங்குகின்றனர். ஏஜென்சிகள் மூலமாக சொகுசு விடுதிகளில் முன்பதிவு செய்திருந்த அறைகளையும் ரத்து செய்துள்ளனர்.
இஸ்ரேல் மட்டுமின்றி, கர்நாடகாவுக்கு வருகை தந்துள்ள தங்கள் நாட்டவரின் பாதுகாப்பை பற்றி பிற நாட்டினரும் கவலை அடைந்துள்ளனர்.
பல்வேறு நாடுகளின் துாதரகங்கள், முதல்வர் அலுவலகம் மற்றும் கொப்பால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரிக்கின்றனர்.
மாநில சுற்றுலா வழிகாட்டிகள் சங்க செயலர் விருபாக்ஷி கூறுகையில், ''கொப்பாலில் நடந்த சம்பவத்துக்கு பின், ஹம்பிக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
எச்சரிக்கை
ஹோம் ஸ்டேக்களில் முன்பதிவு செய்திருந்த அறைகளையும் ரத்து செய்துள்ளனர்,'' என்றார்.
விஜயநகரா எஸ்.பி., ஸ்ரீஹரி கூறியதாவது:
அசம்பாவிதத்துக்கு பின், வெளி மாநிலங்களின் சுற்றுலா பயணியர், தங்கள் வருகையை ரத்து செய்துள்ளனர். பலாத்கார சம்பவத்தை, மொத்த நாடும் கண்டித்துள்ளது. ஹம்பி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், போலீஸ் ரோந்தை அதிகரிக்கும்படி வேண்டுகோள் வந்துள்ளது.
அனைத்து ஹோம் ஸ்டேக்கள் உரிமையாளர்கள், போலீஸ் துறை இடையே ஆலோசனை கூட்டம் நடக்கும்.
இந்த சம்பவம் எச்சரிக்கை மணியாகும். ஹம்பி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு போலீஸ் துறை பாதுகாப்பு அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.