/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூபா மீது புகார் செய்த வர்த்திகா கட்டியார் இடமாற் றம்
/
ரூபா மீது புகார் செய்த வர்த்திகா கட்டியார் இடமாற் றம்
ரூபா மீது புகார் செய்த வர்த்திகா கட்டியார் இடமாற் றம்
ரூபா மீது புகார் செய்த வர்த்திகா கட்டியார் இடமாற் றம்
ADDED : மார் 04, 2025 04:57 AM

பெங்களூரு: கர்நாடகாவில், தன் உயர் அதிகாரியான உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி., மீது, தலைமை செயலரிடம் புகார் செய்த டி.ஐ.ஜி., வர்த்திகா கட்டியார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா போலீஸ் துறையில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பணியாற்றி வருபவர் ரூபா. இதே துறையில் டி.ஐ.ஜி.,யாக வேலை செய்தவர் வர்த்திகா கட்டியார்.
கடந்த மாதம் 20ம் தேதி மாநில தலைமை செயலர் ஷாலினியிடம், வர்த்திகா கட்டியார் கொடுத்த புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மற்ற துறைகளின் ஆவணங்கள், என் அறையில் இருப்பதாக காட்டும் முயற்சியில் ஐ.ஜி., ரூபா ஈடுபட்டார்.
என் அனுமதி இல்லாமல், என் அறையை பயன்படுத்தினார். 2024ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி ரூபா அறிவுறுத்தியதன் பேரில், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் மஞ்சுநாத், மல்லிகார்ஜுன் ஆகியோர், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, என் அறையின் சாவியை எடுத்துக் கொண்டு வந்து அறையை திறந்துள்ளனர்.
சில ஆவணங்களை என் அறைக்குள் வைத்து, அவை என் அறையில் இருப்பது போன்று மொபைல் போனில் படம் எடுத்து, ரூபாவுக்கு வாட்ஸாப்பில் அனுப்பி உள் ளனர்.
இதுபற்றி எனக்கு தெரியவந்ததும் மஞ்சுநாத், மல்லிகார்ஜுனிடம் கேட்டேன். அவர்கள் உண்மையை கூறினர்.
கடந்த காலத்திலும் இதுபோன்று நடந்து இருக்கலாம். எதிர்காலத்திலும் இதுபோன்று நடக்கலாம்.
என் அறையை திறந்தது பற்றி கேட்டபோது, எனக்கு எதிராக உயர் அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்வேனென, ரூபா மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் அவர் கூறியிருந்தார்.
அந்த புகாரை மாநில டி.ஜி.பி., அலோக் மோகனுக்கு, ஷாலினி அனுப்பி வைத்திருந்தார். இதுபற்றிய தகவல் தாமதமாக வெளியாகி கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜ.ஜி., பதவியில் இருந்து வர்த்திகா கட்டியார் நேற்று துாக்கி அடிக்கப்பட்டார்.
பெங்களூரு ஊர்காவல் படையின் கூடுதல் கமாண்டன்ட் ஆக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரூபா அதே பொறுப்பில் நீடிக்கிறார்.
சொகுசு வசதி
ரூபா 2000ம் ஆண்டு ஐ.பி.எஸ்., குழுவை சேர்ந்தவர். வர்த்திகா கட்டியார் 2010ம் ஆண்டு ஐ.பி.எஸ்., குழுவை சேர்ந்தவர்.
ரூபாவின் சொந்த ஊர் கர்நாடகாவின் தாவணகெரே. வர்த்திகா கட்டியார் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, சிறைக்குள் அவர் சொகுசாக வாழ்கிறார் என்றும், அதற்காக உயர் அதிகாரிக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் ரூபா.
நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர். 2023ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரியின் தனிப்பட்ட புகைப்படங்களை, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அவருக்கு எதிரான சில கேள்விகளை ரூபா கேட்டார்.
பதிலுக்கு ரூபாவை பைத்தியம் என்று ரோகிணி விமர்சித்தார். இதனால் இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
ஏழு மாதங்களுக்கு பின்பு தான் பணி ஒதுக்கப்பட்டது.
ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்த மானநஷ்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

