ADDED : ஏப் 22, 2026 01:49 AM
கோலார்: செங்கல் தொழிற்சாலையில், கொத்தடிமைகளாக இருந்த 10 தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர்.
கோலார் மாவட்டம், மாலுார் தாலுகாவின், சிவாரபட்டணா அருகில், 'என்.கே.என்., செங்கல் தொழிற்சாலை' உள்ளது. இது இப்ராகிம் கான் என்பவருக்கு சொந்தமானதாகும். இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்து, கொத்தடிமைகளாக வேலை வாங்குவதாக, தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று மாலை, கோலார் சமூக நலத்துறை அதிகாரிகள், போலீசார் உட்பட, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள், தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு கொத்தடிமைகளாக இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 10 தொழிலாளர்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள், ஒடிஷாவை சேர்ந்தவர்கள். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப, அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர்.
தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பயன்படுத்திய, செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் முகமது இப்ராகிம் கான் மீது, மாலுார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
